சிறுதானிய சாகுபடிக்கு ரூ.65 கோடி மானியம்: விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்!
சிறுதானிய சாகுபடிக்கு ரூ.65 கோடி மானியம்: விவசாயிகள் முன்பதிவு செய்யலாம்!
ADDED : அக் 14, 2024 12:32 AM

சென்னை: சிறுதானியங்கள் சாகுபடியை அதிகரிக்க, 65 கோடி ரூபாய் மானியம் வழங்கும் பணிகளை வேளாண் துறை துவக்கியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதும் சிறுதானிய உணவுகள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் விளையும் கம்பு, கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளது.
சிறுதானியங்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கிறது. இதை கருத்தில் வைத்து, தமிழகத்தில் சிறுதானிய இயக்கத்தை வேளாண் துறை துவக்கியுள்ளது. கடந்தாண்டு ஒதுக்கிய நிதியில், 1.11 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்தனர்.
எனவே, 2028ம் ஆண்டு வரை திட்டத்தை தொடர அரசு முடிவு செய்துள்ளது. நடப்பாண்டு மானிய உதவிகளுக்காக, 65 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேசிய அளவில் கேழ்வரகு சாகுபடியில் முதலிடத்திலும், மக்காச்சோளம் சாகுபடியில் இரண்டாம் இடத்திலும் தமிழகம் உள்ளது. மற்ற சிறுதானியங்கள் சாகுபடியிலும் முக்கிய இடங்களை பிடிக்க, சிறுதானிய இயக்கம், 25 மாவட்டங்களில் செயல்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் விவசாயிகள் குழு உருவாக்க, 1,000 ரூபாய்; சிறுதானிய தொகுப்புகளை உருவாக்க, பழங்குடியின விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 840 ரூபாய்; மற்ற விவசாயிகளுக்கு, 600 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
இயற்கை உரங்கள் வாங்க, ஏக்கருக்கு, 480 ரூபாய் மானியம் தரப்படுகிறது. தேவையுள்ள விவசாயிகள், உழவன் மொபைல்போன் செயலியில் முன்பதிவு செய்யலாம். உதவி வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள், வேளாண் உதவி இயக்குனர்களையும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.