மரபணு மாற்ற தொழில்நுட்பம் கூடாது; முதல்வருக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
மரபணு மாற்ற தொழில்நுட்பம் கூடாது; முதல்வருக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 01, 2024 01:05 AM

சென்னை : “மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை ஏற்க மாட்டோம் என்று, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுத வேண்டும்,'' என, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
அவர் அளித்த பேட்டி:
காவிரியில் மேகதாது அணைக்கு பதிலாக, ராசிமணல் என்ற இடத்தில் அணை கட்ட, அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து பேசினோம்.
அப்போது, 'திட்டம் சாதகமானது தான்; முதல்வர் அமெரிக்க பயணம் முடித்து திரும்பி வந்ததும், கொள்கை முடிவு குறித்து அறிவிப்பார்' என, உறுதி அளித்தார்.
எனவே, அரசு நிலைப்பாட்டை முதல்வர் விரைந்து தெளிவுப்படுத்த வேண்டும். மேட்டூர் அணை, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்கூட்டியே மூடப்பட்டதால், டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு உரிய இழப்பீட்டை தரவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் பயிர் காப்பீட்டு நிறுவனங்களுக்கு விவசாயிகள் பெயரில், 5,000 கோடி ரூபாய் கட்டணமாக வழங்கப்படுகிறது. இழப்பீட்டை தருவதற்கு காப்பீட்டு நிறுவனங்கள் மறுக்கின்றன.
இதை எதிர்த்து, டெல்டா மாவட்டங்களில், 50 இடங்களில் நாளை சாலை மறியல் போராட்டம் நடக்கிறது. கடந்த 2018ல், அ.தி.மு.க., ஆட்சியில் இதேபோல பிரச்னை ஏற்பட்டது.
வேளாண் துறை செயலர் விவசாயிகளை அழைத்து பேசி உரிய இழப்பீட்டை பெற்று தந்தார். இப்போது, விவசாயிகளையும், காப்பீட்டு நிறுவனங்களையும் அழைத்து பேச தயங்குகின்றனர்.
மரபணு மாற்ற பயிர்கள் தொழில்நுட்பத்தை செயல்படுத்த, மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. இதுதொடர்பாக, விவசாயிகளிடம் கருத்து கேட்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
இதை சாதகமாக பயன்படுத்தி, இந்த தொழில்நுட்பத்தை ஆதரிப்பவர்களை கொண்டு, மத்திய அரசு விசாரணை குழுவை அமைத்துள்ளது.
இதற்கு, முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை ஏற்க மாட்டோம் என, பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.