இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை பூட்டி விவசாயிகள் போராட்டம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை பூட்டி விவசாயிகள் போராட்டம்
ADDED : ஜூன் 24, 2025 06:33 AM
திருச்சி: விவசாயிகளுக்கான மத்திய, மாநில அரசுகளின் மானிய திட்டங்கள், நிதி உதவிகள் தேசிய மயமாக்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாயிலாக வழங்கப்படுகின்றன. நான்கு ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட டிராக்டர்களுக்கு மானியம் வழங்கப்படவில்லை. அதனால், கடன் வழங்கிய வங்கிகள் டிராக்டர்களை ஜப்தி செய்கின்றன.
கிராமங்களில், மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களின் சம்பளத்தையும், விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி தொகையையும், எட்டு மாதங்களாக பிடித்தம் செய்கின்றனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் வங்கியில் பலமுறை புகார் அளித்தும், பணம் பிடித்தம் செய்வதை நிறுத்தவில்லை.
இதை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர், நேற்று திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலக கேட்டை பூட்டி முற்றுகையிட்டனர்.
கன்டோன்மென்ட் போலீசார் அவர்களை கலைத்தனர். துறையூர் அருகே பச்சபெருமாள்பட்டி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் தொழிலாளர்களும், விவசாயிகளும் முற்றுகை போராட்டம் நடத்தினர்.