ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க விவசாயிகள் போராட்டம்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்க விவசாயிகள் போராட்டம்
ADDED : பிப் 17, 2024 12:21 AM

சென்னை:ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விற்க வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்கப்படும்' என, 2021 சட்டசபை தேர்தல் நேரத்தில், தி.மு.க., சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என, தென்னை மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், மாநிலம் முழுதும் ஆங்காங்கே தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 7ம் தேதி, சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தின.
தொடர்ந்து நேற்று மீண்டும் அதே இடத்தில் ஒன்பது சங்கங்களைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட விவசாயிகள், தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். கைகளில் தேங்காய், நிலக்கடலை செடிகளை விவசாயிகள் வைத்திருந்தனர்.
மலேஷியா, இந்தோனேஷியா பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
அங்கு வந்த போலீசார், விவசாயிகளை குண்டுக்கட்டாக துாக்கி வாகனங்களில் ஏற்றி, அருகில் உள்ள சமுதாயக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.