ADDED : பிப் 17, 2025 07:52 AM

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கவின் கர்ணன், 34, டீக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கடைக்குள் மர்மப்பொருள் வெடித்து சிதறியது. இதில், கடையில் இருந்த பொருட்கள், இரும்பு ஷட்டரை பிய்த்துக்கொண்டு, 50 அடி துாரத்துக்கு துாக்கி வீசப்பட்டன.
அப்போது, கடை முன் பஸ்சுக்காக காத்திருந்த திருச்செங்கோட்டைச் சேர்ந்த ஜனனி, 21, அவரது தந்தை விஜயகுமார், 54, பலத்த காயமடைந்தனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
திருச்செங்கோடு போலீசார், 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, விபத்து நடந்த கடையில் விசாரணை நடத்தினர்.
இதில், கடையில் இருந்த சிலிண்டர் வெடிக்காமல் இருந்தது தெரியவந்தது.
எந்த பொருள் வெடித்தது என, தெரியவில்லை. ஜெலட்டின் போன்ற சக்திவாய்ந்த வெடிபொருள் வெடித்திருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. கவின் கர்ணனிடம் விசாரணை நடக்கிறது.

