ADDED : நவ 15, 2024 02:21 AM

பாலக்காடு,:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையார் கிழக்கு அட்டப்பள்ளம் மாகாளிக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி மோகனன், 60. இவரது மகன் அனிருத், 20. நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றனர்.
அப்போது, அருகிலுள்ள, இன்னொரு விவசாயியின் மோட்டார் அறையில் இருந்து, நேரடியாக மின்கம்பி மூலம் காட்டுப்பன்றிக்கு வைத்திருந்த மின்பொறியில் இருவரும் சிக்கி, அந்த இடத்திலேயே இறந்தனர்.
இரவு நீண்ட நேரமாகியும், நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற இருவரும் திரும்பி வராததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள், வயலுக்கு சென்று தேடினர். அப்போது, தந்தையும், மகனும் மின்பொறியில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து இறந்து கிடப்பதை கண்டனர்.
தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினர், மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதையடுத்து, மின் பொறி இணைப்பை துண்டித்து, இருவரின் உடல்களையும் மீட்டு, பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பிரேத பரிசோதனைக்கு பின், நேற்று காலை இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சம்பவம் குறித்து வாளையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மோட்டார் அறையில் இருந்து நேரடியாக மின்சாரத்தை எடுத்து, மின் பொறிக்கு பயன்படுத்தியது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.