தன் ஜாடை இல்லா குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை கைது
தன் ஜாடை இல்லா குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை கைது
ADDED : மார் 17, 2025 05:56 AM
ஈரோடு : தன் ஜாடையில் இல்லாததால், பெற்ற குழந்தையை அடித்துக்கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், எழுமாத்துார், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் குமார், ௩௫. இவரது மனைவி பாண்டிசெல்வி, 24. தம்பதிக்கு ஓராண்டிற்கு முன் இரட்டை குழந்தை பிறந்தது. மகளுக்கு தீபாஸ்ரீ, மகனுக்கு திவான் என பெயரிட்டனர்.
இரட்டை குழந்தையில் திவானுக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த, 15ல் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பாண்டிசெல்வி அழைத்து சென்றார். மகளை கணவரிடம் விட்டு சென்றார்.
அன்று மதியம் பாண்டிசெல்விக்கு குமார் போன் செய்தார். மகள் பேச்சு, மூச்சின்றி மயங்கி விட்டது. எழுமாத்துார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியாகவும் கூறியுள்ளார்.
இதனால் அங்கு சென்ற பாண்டிசெல்வி, மொடக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மகளை கொண்டு சென்றார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக, மொடக்குறிச்சி போலீசில் பாண்டிசெல்வி புகாரளித்தார். சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் குழந்தையின் தந்தையான குமாரை, நேற்று கைது செய்தனர்.
போலீசாரிடம் குமார் அளித்த வாக்குமூலம்:
இரட்டை குழந்தை பிறந்ததில் இருந்தே வீட்டில் பிரச்னை. குழந்தைகள் என் ஜாடையில் இல்லை.
இதனால் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. கடந்த, 15ல் வீட்டில் தனியாக டிவி பார்த்து கொண்டிருந்தேன். அப்போது தீபாஸ்ரீ அழுது கொண்டே இருந்தது.
யாருக்கோ பிறந்த குழந்தையை நான் ஏன் பார்த்து கொள்ள வேண்டும் என்ற ஆத்திரத்தில், தலையை பலமுறை சுவரில் மோதினேன். இதில் இறந்து விட்டது.
இதை மறைக்க மனைவியிடம் பொய் சொல்லி வரவழைத்தேன்.
இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.