அன்புமணி சுற்றுப்பயணத்திற்கு எதிர்ப்பு; தடைவிதிக்க சொல்கிறார் ராமதாஸ்!
அன்புமணி சுற்றுப்பயணத்திற்கு எதிர்ப்பு; தடைவிதிக்க சொல்கிறார் ராமதாஸ்!
ADDED : ஜூலை 24, 2025 11:46 AM

விழுப்புரம்: ''அன்புமணி நாளை தொடங்கும் சுற்றுப்பயணத்தால் வட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் இருப்பதால், போலீசார் தடை விதிக்க வேண்டும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: பா.ம.க., தலைமையகம் சென்னையிலிருந்து தைலாபுரத்துக்கு மாற்றப்பட்டு விட்டது. சென்னையிலோ வேறு எங்குமோ பா.ம.க., தலைமையகம் இல்லை. பனையூரில் பா.ம.க., தலைமையகம் இருப்பதாக சொல்வது, தாங்களாகவே நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டு செயல்படுவது சட்டவிரோதமானது.
தலைவர் நான் தான்!
கட்சி தலைமைக்கு கட்டுப்படாதவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார். கட்சியும் நான் தான், தலைவரும் நான் தான். சிறப்பு பொதுக்குழுவின் படி பா.ம.க.,வின் செயல் தலைவராக அன்புமணி தொடர்வார்.
தன்னை தலைவர் எனக் கூறி கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும். அவரின் பெயருக்குப் பின்னால் என் பெயரைப் போடக்கூடாது என ஏற்கெனவே கூறி இருக்கிறேன். ஜூலை 25ம் (நாளை) தேதியில் இருந்து நடைபயணம் போவதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதற்கு டி.ஜி.பி., இடம், நடவடிக்கை எடுக்க கோரி, நாங்கள் புகார் மனு கொடுத்து இருக்கிறோம்.
ஒட்டுக்கேட்பு கருவி
இதனால் வட தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் இருப்பதால், போலீசார் அதிக கவனம் எடுத்துகொண்டு தடை செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். ஒட்டுக்கேட்பு கருவி இங்கிலாந்து அல்லது பெங்களூரிலிருந்து வாங்கப்பட்டிருக்கலாம். ஏன் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தார்கள், யார் வைத்தார்கள் என எனக்குத் தெரியும். அதை நான் அடுத்த வாரம் கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.