துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி தந்தை-மகன் உயிரிழப்பு; குடும்பத்தினர் சோகம்
துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி தந்தை-மகன் உயிரிழப்பு; குடும்பத்தினர் சோகம்
ADDED : பிப் 16, 2025 02:18 PM

திருநெல்வேலி: நெல்லையைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் துபாயில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லையைச் சேர்ந்தவர் மாதவன்(55). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். அவரது மகன் கிருஷ்ண சங்கர் சென்னையில் சி.ஏ., படித்து வந்தார். தொழில்பூர்வ பயிற்சிக்காக அவர் துபாயிற்கு சென்றிருந்தார்.
சம்பவத்தன்று, தந்தை-மகன் இருவரும் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் இறங்கிய போது, கிருஷ்ண சங்கர் நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதியில் மூழ்கினார். அவரை காப்பாற்ற மாதவன் நீரில் இறங்கியபோது, அவரும் மூழ்கி உயிரிழந்தார்.
இருவரின் உடலும் இன்று காலை 6.30 மணிக்கு நெல்லையில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் உறவினர்களால் சிந்து பூந்துறை மின்சாரச் சுடுகாட்டில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இச்சம்பவம், அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.