தேர்தல் நேரத்தில் மூச்சுவிட பயம்: நடிகர் ரஜினி பேச்சு
தேர்தல் நேரத்தில் மூச்சுவிட பயம்: நடிகர் ரஜினி பேச்சு
UPDATED : மார் 21, 2024 03:33 AM
ADDED : மார் 21, 2024 01:01 AM

சென்னை:''தேர்தல் நேரம் என்பதால், மூச்சு விட்டாலும் பயமாக உள்ளது,'' என, நடிகர் ரஜினி கூறினார்.
சென்னை, வடபழனி ஆற்காடு சாலையில் காவேரி மருத்துவமனையை, நடிகர் ரஜினி நேற்று திறந்து வைத்தார்.
பின், ரஜினி பேசியதாவது:
கடந்த 25 ஆண்டுகளாக எந்த திறப்பு விழாவுக்கும் சென்றதில்லை. ஏதாவது ஒரு கல்லுாரி, கட்டடத்தை திறந்து வைத்தால், அதில் ரஜினிகாந்தும் பார்ட்னர்; அவருக்கும் பங்கு உள்ளது; பினாமி என சொல்வர்.
காவேரி மருத்துவமனை உட்பட பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு, இந்த உடம்பு சென்று வந்துள்ளது. அதனால், டாக்டர்கள், நர்ஸ்கள் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. அவர்களின் உதவியாலும், அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தாலும், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
ஏ.வி.எம்., ஸ்டூடியோவின் ஒரு பகுதியான இவை, ராசியான பகுதி என்பதால், மிகப்பெரிய புகழ் பெறும்.
முதலில் ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனை எங்கே இருக்கிறது என்று கேட்டால், நடிகர் கமல் வீடு பக்கத்தில் இருக்கிறது என்று சொல்வர்.
இப்போது, கமல் வீடு எங்கே இருக்கிறது என்றால், காவேரி மருத்துவமனை அருகே உள்ளது என, சொல்கின்றனர்.
நான் சும்மா பேச்சுக்கு சொன்னேன். கமலை கலாட்டா செய்வதாக யாரும் தவறாக நினைக்க வேண்டாம். தேர்தல் நேரமாக இருப்பதால், மூச்சு விட்டால் கூட பயமாக உள்ளது.
இந்தியாவிலேயே மருத்துவ தலைநகரமாக சென்னை இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காற்று, நீர்நிலை மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் யாருக்கு எப்போது என்ன நோய் வரும் என, தெரியாது.
அனைத்திலும் கலப்படம் வந்துவிட்டது. கலப்படம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். வடபழனி சுற்றுப்புற பகுதி மக்களுக்கு காவேரி மருத்துவமனை மிகப்பெரிய வரபிரசாதமாக அமைந்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
காவேரி மருத்துவமனைகள் குழும செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் பேசியதாவது:
காவேரி மருத்துவமனை, 30 படுக்கைகளுடன் துவங்கப்பட்டு, 2,500 படுக்கைகளுடன் குழுமமாக உயர்ந்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 5,000 படுக்கையாக அதிகரிக்க உழைத்து வருகிறோம்.
புதிதாக துவக்கப்பட்ட மருத்துவமனையில், அதிநவீன மேம்படுத்தப்பட்ட இதயம், நுரையீரல், நரம்பியல், எலும்பியல், கருத்தரிப்பு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை மையங்கள், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் அவசர சிகிச்சை மற்றும் உயர்தர சிகிச்சை வசதிகள் மிதமான கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

