ADDED : மார் 29, 2024 06:34 PM

மதுராந்தகம்: தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
மதுராந்தகத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: தி.மு.க., தீயசக்தியாக இன்று வரை திகழ்கிறது. ஸ்டாலினும், உதயநிதியும் அனைத்து கூட்டங்களில் பேசும் போது, பாஜ., உடன் அதிமுக., கள்ளக்கூட்டணி வைப்பதாக கூறுகின்றனர். அப்படி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட பழக்கம் உங்களுக்கு தான் உள்ளது. நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறியதால் உங்களுக்கு ஏன் எரிச்சல் வருகிறது.
தி.மு.க., ஏன் கவலைப்பட வேண்டும். நிர்வாகிகள் வேண்டாம் என்று சொன்னால் கூட்டணியில் இருந்து விலகுவோம். அது எங்களுடைய விருப்பம். தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. தி.மு.க.,வில் ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர வேறு யாராவது தலைமைப்பதவிக்கு வர முடியுமா?
கரும்புக்காட்டில் கான்கிரீட் ரோடு அமைத்தவர் ஸ்டாலின்
விவசாயத்தை பற்றி எதுவுமே தெரியாத முதல்வர் ஸ்டாலின், தெரிந்தது போல் நாடகம் ஆடுவது, மக்களை ஏமாற்றத்தான். முதல்வர் ஸ்டாலின் சேலம் மாவட்டம் கெங்கவள்ளிக்கு வந்தார். நடுக்கரும்புக் காட்டில் போடப்பட்ட கான்கிரீட் ரோட்டில், பேன்ட் ஷூ போட்டு நடந்து சென்று ஏர் ஓட்டிய நவீன விவசாயி அவர். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.

