உட்கட்சி விவகாரங்கள் வெளிவரும் என அச்சம்: நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டாமல் சீமான் தவிப்பு
உட்கட்சி விவகாரங்கள் வெளிவரும் என அச்சம்: நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டாமல் சீமான் தவிப்பு
ADDED : நவ 21, 2024 06:35 AM

சென்னை: மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை கூட்ட கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், சீமான் தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.19 சதவீதம் ஓட்டுக்களை பெற்றுள்ளது. கட்சி துவங்கி 15 ஆண்டுகளில், பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. கட்சியின் ஓட்டு சதவீதம் மட்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால், நிர்வாகிகள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.
எனவே, 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என, நிர்வாகிகள் பலரும் விரும்புகின்றனர். கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், அதே முடிவில் இருந்தார். நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பினார்.
ஆனால், தன் கட்சி மாநாட்டில் பேசிய விஜய், தமிழ் தேசிய அரசியல் கொள்கையை பின்பற்றப் போவதாக அறிவித்தார். அது, அந்த கொள்கையை மையமாக வைத்து அரசியல் செய்து வந்த சீமானுக்கு நெருக்கடியாக அமைந்தது. திரள் நிதி என்ற பெயரில் கட்சி வளர்ச்சி நிதி வசூலிப்பதில்பாதிப்பு ஏற்படலாம் என, சீமான் தரப்புக்கு அச்சம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், த.வெ.க., வுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை எனவும், வழக்கம்போல் சொந்த காலில் நிற்க போவதாவும் சீமான் கூறத் துவங்கியுள்ளார். அதனால், லோக்சபா தேர்தலின்போது நடந்த உள்கட்சி பிரச்னைகளும் தற்போது அம்பலமாகி வருகின்றன. அக்கட்சியின் மகளிர் அணி முக்கிய நிர்வாகிகள் இருவர் கட்சியில் இருந்து ஒதுங்கியுள்ளனர்.
மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முக்கிய நிர்வாகிகள், சட்டசபை தேர்தலுக்குள் வெளியேறி விடுவர் என, நாம் தமிழர் கட்சி மூத்த நிர்வாகிகள் அஞ்சுகின்றனர்.
கட்சியினர் விலகுவதற்கான காரணத்தை கண்டறிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும் என, சீமானுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆனால், இக்கூட்டத்தை நடத்த, சீமான் தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
இவ்விவகாரத்தின் தீவிரத்தை சீமான் புரிந்து கொண்டுள்ளார். ஆனால், அது பற்றி பேச பலருக்கும் வாய்ப்பு தந்தால், உள்கட்சி விவகாரங்களை உடைத்து விடுவர்.
தேர்தல் நிதி வசூல் தொடர்பான விபரங்களை கட்சி தலைமையும், வேட்பாளர்களும் இன்னும் வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளனர். இந்த பிரச்னையும் பரபரப்பாக எழுப்பப்பட்டால், கட்சியில் கைகலப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக சீமான் அஞ்சுகிறார். இதற்காகவே, மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்த தயங்குகிறார். இவ்வாறு கூறினார்.