ADDED : மார் 04, 2024 11:57 PM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் திதி, தர்ப்பணம் செய்யும் பக்தரிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் வாபஸ் பெறப்பட்டது.
ஹிந்துக்களின் புனித தலங்களில் முக்கியமானது ராமேஸ்வரம். தமிழக பக்தர்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் இருந்தும் ஏராளமானோர் வந்து தர்ப்பணம் செய்கின்றனர். காசி பயணத்திற்கு முன்னதாகவும், பயணம் முடிந்தபின்னரும் ராமேஸ்வரத்தில் பூஜை செய்வது வழக்கம்.
ஹிந்துக்களை பணம் காய்ச்சி மரமாக கருதும் அறநிலையத்துறை திதி, தர்ப்பணத்திற்கு கட்டணம் என்ற பெயரில் வசூலுக்கு திட்டமிட்டது. ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கரையில் திதி, தர்ப்பண பூஜை செய்வதற்கு பக்தரிடம் ரூ.200, ரூ.400 கட்டணம் வசூலிக்க கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கென தனியாக புரோகிதர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்தது.
ஏற்கனவே பல விதங்களில் பணம் வசூலிக்கும் போது கடற்கரை பூஜைக்கும் கட்டணம் வசூலிக்க கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து கட்டண அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அக்னி தீர்த்த கரையில் திதி, தர்ப்பணம் பூஜைக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவு நிர்வாக காரணத்திற்காக வாபஸ் பெறுவதாக கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்துள்ளார்.
ஹிந்துக்களின் ஒன்றிணைந்த எதிர்ப்புக்கு கிடைத்த பலன் இது என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

