sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகம் முழுதும் உயர் ரக கஞ்சா சப்ளை செய்த பெண் தாதா கைது!

/

தமிழகம் முழுதும் உயர் ரக கஞ்சா சப்ளை செய்த பெண் தாதா கைது!

தமிழகம் முழுதும் உயர் ரக கஞ்சா சப்ளை செய்த பெண் தாதா கைது!

தமிழகம் முழுதும் உயர் ரக கஞ்சா சப்ளை செய்த பெண் தாதா கைது!

16


UPDATED : டிச 29, 2025 12:24 AM

ADDED : டிச 29, 2025 12:13 AM

Google News

16

UPDATED : டிச 29, 2025 12:24 AM ADDED : டிச 29, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: தமிழகம் முழுதும் உயர் ரக கஞ்சா சப்ளை செய்த மற்றும் இலங்கைக்கும் கடத்திய பெண் தாதா, ஆந்திராவில் கைது செய்யப்பட்டார். பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்த இவருக்கு, துணையாக இருந்த ஏழு பேரும் கைதாகினர். இது தவிர, பெங்களூரில் நடத்தப்பட்ட சோதனையில், 56 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 28 வயது பெண் காடே ரேணுகா. இவர், ஆந்திர மாநிலத்தில் பயக்கராவ்பேட்டை, நரசிப்பட்டணம், சலுாரு மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும், தமிழகத்திற்கும் உயர் ரக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதனால் இவரை, 'பெண் தாதா' என்றே பலரும் அழைத்துள்ளனர். அத்துடன் இவர், பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்ததாகவும் கூறப்படுகிறது.

ரேணுகாவும், அவரது கூட்டாளியான சூர்யா காளிதாசும், நரசிப்பட்டணத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர்; அங்கிருந்தபடி, ஒடிஷாவில் இருந்து உயர் ரக கஞ்சாவை வாங்கி, தமிழகம் மற்றும் இலங்கைக்கு சப்ளை செய்துள்ளனர்.

74 கிலோ கஞ்சா


இந்நிலையில், ரகசிய தகவலின்படி, சமீபத்தில் ஆந்திர போலீசார், சிருகாவரம் என்ற கிராமத்திற்கு அருகே ஒரு கும்பலை வழிமறித்து, 74 கிலோ உயர் ரக கஞ்சா, ஒரு கார், இரண்டு பைக்குகள் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது, காடே ரேணுகாவிற்கும், அவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரேணுகா மற்றும் அவரது கும்பலை சேர்ந்த, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த விபரம்:


போதை பொருள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக, பெங்களூரு மற்றும் தமிழகத்தின் கோவையில், ரேணுகா பல வீடுகளை வாடகைக்கு எடுத்திருந்ததுடன், போதை பொருட்களை விற்பனை செய்வதற்காக, ஒரு பெரிய கும்பலையும் தயார்படுத்தி வைத்திருந்தார்.

ரேணுகா, இடைத்தரகர்கள் உதவியுடன், ஒடிஷாவின் பாலிமேலா மற்றும் சித்ரகொண்டாவில் உள்ள பழங்குடியினரிடம் இருந்து கிலோ, 5,000 ரூபாய் என்ற விலையில் உயர் ரக கஞ்சாவை வாங்கியுள்ளார்.

பின், அதை தமிழகம் மற்றும் இலங்கைக்கு அனுப்பியுள்ளார். இவரின் கும்பலை சேர்ந்தவர்கள், கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி, தமிழகம் முழுதும் விற்பனைக்கு அனுப்பியுள்ளனர். அத்துடன், தமிழகத்தில் உள்ள தங்களது போதை பொருள் கும்பல் உதவியுடன் இலங்கைக்கும் கஞ்சாவை கடத்தியுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்தன.

இதற்கிடையில், கர்நாடக மாநிலம், பெங்களூரில் மூன்று இடங்களில் செயல்பட்ட போதை பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையை, மஹாராஷ்டிரா போதை பொருள் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். அங்கிருந்து, 55.80 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மும்பை போலீசார்


மஹாராஷ்டிராவின் மும்பை மாநகர போலீசார், போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட அப்துல்லா காதர் என்பவரை, கடந்த 22ம் தேதி கைது செய்தனர். அவரிடம் இருந்து, 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கர்நாடகாவின் பெலகாவியில் இருந்து போதை பொருள் வாங்கி வந்து விற்பனை செய்ததாக கூறியுள்ளார்.

இந்த விபரத்தை மும்பை போலீசார், மஹாராஷ்டிரா போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள், பெலகாவியில் சோதனை நடத்தி, பிரசாந்த் யல்லப்பா பாட்டீல் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, பெங்களூரில் மூன்று இடங்களில் போதை பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவதாகவும், அங்கிருந்து பெலகாவிக்கு போதை பொருட்களை கொண்டு வந்து, பின் மும்பைக்கு கடத்தி விற்றதையும் ஒப்புக் கொண்டார்.

17 கிலோ ரசாயனம்



இதையடுத்து, கடந்த, 26ம் தேதியும், நேற்று முன்தினமும் பெங்களூரின் மூன்று இடங்களில் செயல்பட்டு வந்த போதைப் பொருள் தொழிற்சாலைகளில், மஹாராஷ்டிரா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது, 4 கிலோ 100 கிராம் எடையுள்ள, 'மெத் ஆம் பெட்டமைன்' என்ற போதைப்பொருள் மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்தப்படும், 17 கிலோ ரசாயனத்தையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு, 55.88 கோடி ரூபாய்.

போதை பொருட்களை தவிர, அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும், மஹாராஷ்டிரா போலீசார் பறிமுதல் செய்ததுடன், மூன்று தொழிற்சாலைகளுக்கும், 'சீல்' வைத்தனர்.

கர்நாடகாவில் போதை பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக, மாநில காங்., அரசின் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி வரும் நிலையில், தலைநகர் பெங்களூரிலேயே மூன்று போதை பொருள் தயாரிப்பு தொழிற்சாலைகள் செயல்பட்டிருப்பது, காங்., அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது.

உண்மை இல்லை


கடந்த ஆகஸ்ட் மாதம், முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரில் செயல்பட்டு வந்த போதை பொருள் தயாரிப்பு தொழிற்சாலையை, மும்பை போலீசார் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. 'மஹாராஷ்டிரா போலீசாரால், பெங்களூரில் இயங்கும் போதை பொருள் தொழிற்சாலையை கண்டுபிடிக்கும் போது, பெங்களூரு போலீசார் என்ன செய்கின்றனர்' என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''பெங்களூரில், 55.88 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்ததாக, மஹாராஷ்டிரா போலீசார் கூறுவது, உண்மை அல்ல. அவர்கள் பறிமுதல் செய்தது, 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான, போதை பொருள் தயார் செய்யும் ரசாயனங்கள் தான். அவற்றில் இருந்து, இன்னும் போதை பொருட்கள் தயாரிக்கப்படவில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us