போக்சோ வழக்கில் ரூ.10 ஆயிரம் லஞ்சம்: பெண் வழக்கறிஞர் கைது
போக்சோ வழக்கில் ரூ.10 ஆயிரம் லஞ்சம்: பெண் வழக்கறிஞர் கைது
ADDED : டிச 05, 2025 09:02 PM

தர்மபுரி: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வழக்கு நடத்த 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தர்மபுரி போக்சோ நீதிமன்ற அரசு பெண் வழக்கறிஞரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பையர்நத்தம் கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இது தொடர்பான போக்சோ வழக்கு தர்மபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் குழந்தை சார்பாக அரசு வழக்கறிஞராக கல்பனா ஆஜராகினார். வழக்கை நடத்துவதற்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் கல்பனா 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். இந்த பணத்துடன், கல்பனாவை அவரது வீட்டில் வைத்து சந்தித்த , 10 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பணத்தை கொடுத்துள்ளார்.
அதனை வாங்கிய கல்பனா, அருகில் இருந்த மேஜைக்கு அடியில் வைத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கல்பனாவை கையும் களவுமாக கைது செய்ததுடன் ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

