ரேடியோ காலர் பொருத்தும் திட்டத்தில் சொதப்பல்; மயக்கம் தெளியாமல் வரையாடு உயிரிழப்பு
ரேடியோ காலர் பொருத்தும் திட்டத்தில் சொதப்பல்; மயக்கம் தெளியாமல் வரையாடு உயிரிழப்பு
ADDED : டிச 08, 2024 08:13 AM

கூடலூர்: மயக்க மருந்து செலுத்தி ரேடியோ காலர் பொருத்தப்பட்ட வரையாடு,
மயக்கம் தெளியாமலேயே உயிரிழந்தது.
தமிழகத்தின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள வரையாடு, நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே காணப்படுகிறது. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ள வரையாடுகளை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தமிழக அரசு வனத்துறை மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி அவற்றின் வாழ்விடங்களை கண்காணிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் முக்குருத்தி தேசிய பூங்கா, அவலாஞ்சி பிரிவு, வெஸ்டர்ன் கேட்ச்சிமென்ட் வனப்பகுதி உள்ள இரும்பு பாலம் சாலையில் நேற்று முன் தினம் இந்த பணிகள் நடந்தன. நீலகிரி வரையாடு திட்ட இயக்குனர் கணேசன் தலைமையில், கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் வரையாடுகளுக்கு 'ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.
வரையாடு ஒன்றுக்கு மயக்க ஊசி செலுத்தி, அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி வனப்பகுதியில் விடுவித்தனர். இரண்டாவதாக பெண் வரையாடுக்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொருத்தினர். மயக்க நிலையில் இருந்து வெளிவருவதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், மயக்கம் தெளிவு பெறாமலேயே வரையாடு உயிரிழந்தது. இதனால் ரேடியோ காலர் பொருத்தம் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அனைவரும் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இதனால் ரேடியோ காலர் பொருத்தும் திட்டம் பின்னடைவை சந்திக்கும் என வனத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா உத்தரவுப்படி, பெண் வரையாடு உடலை சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி வன உயிரியல் துறை தலைவர் ஸ்ரீ குமார், ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் விஜயராகவன், முதுமலை புலிகள் காப்பல கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில் உயிரிழந்த பெண் வரையாடுக்கு 8 வயது இருக்கும். அதன் இருதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உள் உறுப்புகள் பலவீனம் அடைத்திருந்ததால் உயிரிழந்துள்ளது. அதன் உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. என்றனர்.