ரூ.2,000 லஞ்சம் பெற்ற விவகாரம் பெண் எஸ்.ஐ.,க்கு 5 ஆண்டு சிறை
ரூ.2,000 லஞ்சம் பெற்ற விவகாரம் பெண் எஸ்.ஐ.,க்கு 5 ஆண்டு சிறை
ADDED : ஜன 22, 2025 12:42 AM
சென்னை:பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையை சுமூகமாக முடித்து வைத்ததற்காக, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில், பெண் எஸ்.ஐ.,க்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் செல்வராஜன். கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவர், கட்டுமான பணிக்காக திருவான்மியூரை சேர்ந்த அழகேசன் என்பவரிடம் இருந்து, மணல் வாங்கியுள்ளார்.
அதற்கான தொகையை வழங்குவதில், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. கடந்த 2013ல் செல்வராஜன் வீட்டுக்குச் சென்ற அழகேசன், அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக செல்வராஜன், வேளச்சேரி போலீசில் புகார் செய்தார்.
அப்போதைய வேளச்சேரி எஸ்.ஐ., கலைச்செல்வி புகாரை விசாரித்து, 'தகராறில் ஈடுபடக் கூடாது; ஏதேனும் பிரச்னை எனில், நீதிமன்றம் வாயிலாக தீர்வு காண வேண்டும்' என அழகேசனிடம் அறிவுறுத்தி, புகாரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
பின், செல்வராஜை தொடர்பு கொண்ட கலைச்செல்வி, பிரச்னையை சுமூகமாக முடித்து வைத்ததற்காக, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில், செல்வராஜன் புகார் அளித்தார். லஞ்ச பணத்தை பெற்ற போது எஸ்.ஐ., கலைச்செல்வியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா முன் நடந்தது. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.
எஸ்.ஐ., கலைச்செல்வி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறிய நீதிபதி, அவருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை அடுத்து, தற்போது பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக உள்ள கலைச்செல்வி, நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.