சான்றிதழில் பெயர் மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம்: பெண் தாசில்தார் கைது
சான்றிதழில் பெயர் மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம்: பெண் தாசில்தார் கைது
UPDATED : ஜூலை 24, 2025 06:44 AM
ADDED : ஜூலை 24, 2025 06:38 AM

ஈரோடு: கரூர் மாவட்டம், கடவூர் அருகே பிறப்பு சான்றிதழில், பெயர் மாற்றம் செய்வதற்காக, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், திங்களூரை சேர்ந்த வேல்முருகன் மனைவி ரேவதி, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் பவித்ரா, ஈரோட்டில் உள்ள கல்லுாரியில் படிக்கிறார். பவித்ராவின் பிறப்பு சான்றிதழில், பவித்ரா என்பதற்கு பதிலாக பௌத்ரா என்று இருந்துள்ளது. கடவூர் தாசில்தார் அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்வதற்காக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று கடவூர் தாசில்தார் சவுந்தரவல்லியை சந்தித்த ரேவதி, மகளின் பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பம் அளித்தார்.அதை பெற்றுக் கொண்ட தாசில்தார் சவுந்தரவல்லி, பெயர் மாற்றம் செய்வதற்கு, 5,000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ரேவதி, கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்படி, நேற்று தாசில்தார் சவுந்தரவல்லியை சந்தித்த ரேவதி அவரிடம், 5,000 ரூபாயை லஞ்சமாக வழங்கினார். அப்போது மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரிக்கின்றனர்.