எங்கெங்கு காணினும் வெள்ளம்...! திருச்சி, சென்னை சாலை போக்குவரத்து துண்டிப்பு
எங்கெங்கு காணினும் வெள்ளம்...! திருச்சி, சென்னை சாலை போக்குவரத்து துண்டிப்பு
UPDATED : டிச 02, 2024 03:50 PM
ADDED : டிச 02, 2024 03:46 PM

சென்னை: வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
பெஞ்சல் புயலின் தாக்கம் இன்னமும் தமிழகத்தில் ஓயவில்லை. மழை விட்டாலும் தூவானம் விடாது போல, புயல் அளித்த மழையால் நீர்நிலைகள் நிரம்பி இருக்கின்றன. மற்ற மாவட்டங்களை காட்டிலும் விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் தாக்கம் அதிகம். அங்கு கொட்டி தீர்த்த அதி கனமழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
ஊருக்குள், சாலையில், தெருவில் என எங்கு பார்த்தாலும் பாதிப்பின் தாக்கம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எங்கு பார்த்தாலும் நீர் நிரம்பி காணப்படுகிறது.
சாலைகளே தெரியாத அளவுக்கு வெள்ளநீர் வழிந்தோடுவதால் பல பகுதிகளில் ஆங்காங்கே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையிலும், அதனை ஒட்டிய ஊர்களிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சித்தனி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் சூழ்ந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகி, ஒரு கட்டத்தில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் பல கி.மீ., தொலைவுக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.வெள்ளம் எப்படி இருக்கிறது என்று வேடிக்கை பார்க்க மக்கள் திரள வேண்டாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சாலை போக்குவரத்து மட்டுமல்லாது, ரயில் போக்குவரத்திலும் பாதிப்பு எதிரொலித்துள்ளது. விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் மழை நீர் அபாய கட்டத்தில் பாய்ந்தோடுவதால் பல்வேறு ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.