ADDED : அக் 01, 2025 09:10 AM

சென்னை : சம்பா சாகுபடிக்கான உரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அதை சமாளிப்பது குறித்து, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தினார்.
மாநிலம் முழுதும் ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவற்றில், நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. இதை பயன்படுத்தி, சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
திணறல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவத்தில், 6.09 லட்சம் ஏக்கரிலும், மற்ற மாவட்டங்களில், 13 லட்சம் ஏக்கரிலும் நெல் சாகுபடி நடந்தது. தற்போது, அறுவடை துவங்கி நடந்து வருகிறது.
இதைதொடர்ந்து, சம்பா சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். மத்திய உர அமைச்சகம், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களை வழங்காமல் நிலுவை வைத்துள்ளது.
இதனால், பற்றாக்குறை மெல்ல தலைதுாக்கி வருகிறது. கையிருப்பில் உள்ள உரங்களை, கூட்டுறவு சங்கங்களில் இருந்து, ஆளும் கட்சி செல்வாக்கு பெற்ற பெரிய விவசாயிகள் அதிகளவில் வாங்கி பதுக்க துவங்கிஉள்ளனர்.
தனியார் கடை உரிமையாளர்களும் விற்பனையை குறைத்து பதுக்கலை அதிகரித்து உள்ளனர். எனவே, சம்பா சாகுபடிக்கு உரம் கிடைக்காமல், விவசாயிகள் திணறும் சூழல் உருவாகி வருகிறது.
எதிர்பார்ப்பு இந்நிலையில், சம்பா சாகுபடிக்கான உரங்கள் இருப்பு குறித்தும், அதை சீராக விநியோகம் செய்வது குறித்தும், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில், கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், வேளாண் துறை செயலர் தட்சிணா மூர்த்தி, கூட்டுறவு துறை செயலர் சத்யபிரதா சாஹு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்கனவே, குறுவை சாகுபடியின் போது, உர பதுக்கலை தடுக்க, அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
'பதுக்கலில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கப்பட்டது; ஆனால், பதுக்கல் தொடர்கிறது.
இனிவரும் காலங்களில் கடுமையான நடவடிக்கைகளை, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.