உர ஆலையால் உப்பள தொழில் பாதிப்பு - கலெக்டர் பதிலளிக்க தீர்ப்பாயம் உத்தரவு
உர ஆலையால் உப்பள தொழில் பாதிப்பு - கலெக்டர் பதிலளிக்க தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : செப் 29, 2024 01:32 AM
சென்னை:'துாத்துக்குடியில் தனியார் உர ஆலையால், உப்பள தொழில் பாதிக்கப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், துாத்துக்குடி கலெக்டருக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு:
ஆறுமுகநேரியில் தலைமுறை தலைமுறையாக ஏராளமானோர் உப்பளம் நடத்தி வருகிறோம். எங்கள் உப்பளத்துக்கு அருகே, தனியார் உரம் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு, ரசாயனப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்நிறுவனம் அப்பகுதியில் எவ்வித அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகளை அமைத்து, உப்பு தண்ணீரை எடுக்கிறது.
பெரும் பாதிப்பு
கடந்த 2012ல் இந்நிறுவனத்தில் இருந்து இரும்பு ஆக்ஸைடு, இல்மனைட் கழிவுகள் வெளியேறி, அப்பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின.
இதுகுறித்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்துள்ளோம். உடனே, பாதிக்கப்பட்ட உப்பள உரிமையாளர்களுக்கு இழப்பீடு கொடுத்து, தனியார் உர நிறுவனம் சமரசம் செய்தது.
உப்பளத் தொழிலுக்கு உப்புநீர் தான் முக்கியமான மூலப்பொருள். ரசாயனக் கழிவுகள் நிலத்தில் வெளியேறுவதால், உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
கழிவுநீர் சேமிப்பு ஆவியாதல் தொட்டி ஒன்றை, இந்த கம்பெனி அமைத்து உள்ளது. இதனாலும், அப்பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கழிவுநீர் தொட்டியை மூட உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
விரிவான அறிக்கை
இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், உப்பளத் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ரசாயனக் கழிவுகளை, தனியார் உர நிறுவனம் வெளியேற்றுவது குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், துாத்துக்குடி கலெக்டர், வட்டார வருவாய் அலுவலர், தனியார் உர நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.