கண்களை சிவப்பாக்கும் காய்ச்சல்; ஜனவரி வரை எச்சரிக்கை அவசியம்
கண்களை சிவப்பாக்கும் காய்ச்சல்; ஜனவரி வரை எச்சரிக்கை அவசியம்
ADDED : நவ 26, 2024 12:30 AM

சென்னை: 'கண்களை சிவக்கச் செய்யும் பாதிப்புடன் கூடிய காய்ச்சல் அதிகரித்து வருவதால், ஜனவரி மாதம் வரை எச்சரிக்கை அவசியம்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், 'ப்ளூ வைரஸ்' வகையைச் சேர்ந்த, 'இன்ப்ளூயன்ஸா ஏ அண்டு பி' வகை காய்ச்சல்கள், 75 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
அத்துடன், 11 வகையான வைரஸ் பாதிப்புகளாலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு வைரஸ் பாதிப்பு குணமடைந்த ஓரிரு வாரங்களில், மற்றொரு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கண்ணில் நீர் வடிதல், சிவந்து காணப்படுதல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் கூடிய காய்ச்சலால் தற்போது அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக, பள்ளி செல்லும் சிறார்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தட்ப வெப்பநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஜனவரி மாதம் வரை தொடரும்.
பெரும்பாலும், 'இன்ப்ளூயன்ஸா' வகை காய்ச்சல் என்பதால், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. அதேநேரம், பாதிப்பு கண்டறியப்பட்டதும், உரிய டாக்டரை சந்தித்து சிகிச்சை பெறுவது அவசியம். குழந்தைகள், சிறார்களை, பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதை, பெற்றோர் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.