ஐகோர்ட்டில் காலி பணியிடங்கள் நிரப்பும் விவகாரம் :பதிலளிக்க ஐகோர்ட்டுக்கு உத்தரவு
ஐகோர்ட்டில் காலி பணியிடங்கள் நிரப்பும் விவகாரம் :பதிலளிக்க ஐகோர்ட்டுக்கு உத்தரவு
ADDED : ஆக 26, 2011 12:31 AM

சென்னை : ஐகோர்ட்டில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்யாமல் நிரப்புவதற்கு தடை விதிக்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்க, ஐகோர்ட்டுக்கான வழக்கறிஞர் நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனு: காலியிடங்கள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம், தகுதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் சந்தர்ப்பம் கிடைக்கும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், 2002 முதல் 2008ம் ஆண்டு வரை 71 பேர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது. இந்த காலியிடங்கள் பற்றி அப்போது விளம்பரம் வெளியிடப்படவில்லை.
தற்போது ஐகோர்ட்டில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த பணியிடங்கள் குறித்து விளம்பரப்படுத்தாமல், காலியிடங்களை நிரப்பக் கூடும். தகுதியுள்ள இளைஞர்கள் பலர், ஐகோர்ட்டில் உள்ள பணியிடங்களுக்கு பரிசீலிக்கப்பட உரிமையுள்ளது. எனவே, காலியிடங்கள் பற்றி, அதிகமாக விற்பனையாகும் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடாமல், இந்தப் பணியிடங்களை நிரப்பக் கூடாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜரானார். ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ்குமார் நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். விசாரணையை நான்கு வாரங்களுக்கு, 'முதல் பெஞ்ச்' தள்ளி வைத்தது.

