தி.மு.க., தயவு இல்லாமல் படங்கள் ரிலீஸ் ஆகாது: ராஜா
தி.மு.க., தயவு இல்லாமல் படங்கள் ரிலீஸ் ஆகாது: ராஜா
ADDED : ஜன 10, 2026 06:14 AM

காரைக்குடி: “தமிழகத்தில் தி.மு.க., குழுமத்தின் தயவு இல்லாமல், எந்த படமும் வெளிவர முடியாது,” என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்த 2014 லோக்சபா தேர்தலின்போது, இந்தியாவின் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டால், 100 நாள் திட்டத்தை ரத்து செய்து விடுவார் என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பிரசாரம் செய்தார்.
ஆனால், பிரதமர் மோடி பதவியேற்று 11 ஆண்டுகள் ஆகி விட்டன. அவர்கள் அளித்த 100 நாள் வேலை திட்டம், 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் நடவு மற்றும் அறுவடை காலங்கள் தவிர்த்து, இத்திட்டம் செயல்படுத்தப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் எழுப்பிய புகாரைத் தொடர்ந்து, திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில், பயோமெட்ரிக் முறை பின்பற்றப்படும் என்பதற்குத்தான் திராவிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பயோமெட்ரிக் முறையால் கொள்ளையடிக்க முடியாது என்பதே எதிர்ப்புக்கான பிரதான காரணம்.
பராசக்தி யோ, ஜனநாயகன் படமோ, தணிக்கையில் பிரச்னை என்றால், அதை எப்படி மத்திய அரசு மீதான குற்றமாக சொல்ல முடியும். திரைப்பட தணிக்கை சான்றுக்கு என சில விதிமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையில் தான் சான்று அளிக்க முடியும்.
இவ்விரு படங்கள் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கலுக்கு, பட தயாரிப்புக் குழுதான் காரணம்; மத்திய அரசுக்கு துளிகூட சம்பந்தமில்லை. நடிகர் விஜய்க்கும் பா.ஜ.,வுக்கும் எவ்வித பிரச்னையும் இருந்ததில்லை.
மத்திய தணிக்கை துறை அதிகாரிகள், படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சி பதிவுகள் இல்லை என்றால், சான்றளிக்க தயங்க மாட்டார்கள்.
சர்ச்சைக்குரிய காட்சிப் பதிவுகள் இருப்பதாலேயே, தணிக்கை சான்று வழங்குவதில் சிக்கல் உள்ளது. இப்படி தணிக்கை சான்று வழங்க மறுப்பது, இதற்கு முன்பும் நடந்துள்ளது.
எந்தத் திரைப்படமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆளுங்கட்சி நடத்தும் நிறுவனங்கள் தயவு இல்லாமல் வெளியிட முடியாது. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி ஏற்பட்டதும் இப்பிரச்னைக்கு முடிவு கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

