ரூ.702 கோடி கமிஷன் பெற்று நிதி நிறுவன முகவர்கள் மோசடி
ரூ.702 கோடி கமிஷன் பெற்று நிதி நிறுவன முகவர்கள் மோசடி
ADDED : ஜூன் 03, 2025 05:50 AM

சென்னை: நிதி நிறுவனங்களில், 36,210 பேர் முகவர்களாக செயல்பட்டு, 702 கோடி ரூபாய் கமிஷன் பெற்று மோசடி செய்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், 1,167 நிதி நிறுவனங்கள் மற்றும் பணமோசடியில் ஈடுபட்ட 3,795 பேர் குறித்து, 653 வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக பதிவு செய்துள்ள 653 வழக்குகளில், 346 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. நிதி நிறுவன மோசடிகளை பொறுத்தவரையில், முகவர்கள் தான் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
எங்களின் விசாரணையில், மோசடி நிதி நிறுவனம் என தெரிந்தும், அந்நிறுவனத்தில் பொதுமக்களை கோடிக்கணக்கில் முதலீடு செய்ய வைத்து, முகவர்கள் கமிஷன் தொகை பெற்றுள்ளனர். அவர்கள், ஒரு நிறுவனத்தில் அதிகபட்சம் மூன்று மாதங்கள் மட்டுமே முகவர்களாக இருப்பர். அதன்பின், வேறு ஒரு மோசடி நிறுவனத்திற்கு தாவி விடுவர்.
அந்த வகையில், 36,210 பேர் முகவர்களாக செயல்பட்டு, கமிஷனாக, 702 கோடி ரூபாய் பெற்று, மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. இவர்களை கைது செய்து, சொத்துக்களை முடக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.