தாய்மொழி வாசிக்க திணறும் இளசுகள்; கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு
தாய்மொழி வாசிக்க திணறும் இளசுகள்; கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு
ADDED : ஜன 21, 2024 04:34 AM

சென்னை : நாட்டில் 14 - 18 வயது உள்ளோரில் 25 சதவீதம் பேர் தாய்மொழி வாசிப்பதில் பின்தங்கியுள்ளனர் என, தனியார் நிறுவன கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
'அடிப்படையை தாண்டிய கல்வியின் நிலை' என்ற தலைப்பில், 'பிரதம்' என்ற தனியார் தொண்டு நிறுவனம், தேசிய அளவில் கணக்கெடுப்பு நடத்தியது.
நாடு முழுதும், 26 மாநிலங்களில், 28 மாவட்டங்கள் வீதம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது; அதில் முக்கியமாக, ஒரு மாநிலத்திற்கு ஒரு கிராமப்புற மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கணித திறன்
இதில், 3 - 16 வயதுள்ள குழந்தைகளின் கல்வி, அடிப்படை வாசிப்புத் திறன், கணித திறன் மேம்பட்டிருப்பது தெரியவந்தது.
கிராமங்களில் தற்போது, 18 வயதுடையோரில், 87 சதவீதம் பேர் பள்ளிப் படிப்பை முடித்துள்ளனர். மேலும், 55.7 சதவீதம் பேர் கலை மற்றும் மானுடவியல் பிரிவுகளையே, பட்டப்படிப்பில் தேர்வு செய்துஉள்ளனர்.
இன்ஜினியரிங், அறிவியல், கணித படிப்பில் பெண்களை விட, ஆண்கள் அதிகமாக பட்டம் பெற்றுள்ளனர்.
பள்ளிப் படிப்பை முடித்தவர்களில், 25 சதவீதம் பேருக்கு,இரண்டாம் வகுப்பு பாடங்களை கூட, தங்கள் தாய்மொழியில் வாசிக்க தெரியவில்லை. அதில், 57 சதவீதம் பேர் ஆங்கில வார்த்தைகளை வாசித்து அதன் பொருளையும் அறியும் திறன் கொண்டுஉள்ளனர்.
கூடுதல் அறிவு
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில், கிராமப்புற இளைஞர்கள் கூடுதல் அறிவு பெற்றுள்ளனர்.
கணிதம் மற்றும் ஆங்கில மொழி மற்றும் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் முறை, சமூக வலைதள பாதுகாப்பு குறித்து, பெண்களை விட ஆண்கள் கூடுதல் திறன் பெற்றுள்ளனர் என்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

