எஃப்.ஐ.ஆர். திருத்திய போலீஸ் உதவி கமிஷனர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
எஃப்.ஐ.ஆர். திருத்திய போலீஸ் உதவி கமிஷனர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 12, 2011 12:28 AM
திருவண்ணாமலை: ஆரணி டவுன் போலீஸில், எஃப்.ஐ.ஆரை திருத்திய சென்னை உதவி கமிஷனர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ் (60). இவர், 2007ம் ஆண்டு 13ம் தேதி இரவு அங்குள்ள மந்தைவெளி பகுதியில் பைக்கில் சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் செல்வராஜை வழி மறித்து தாக்கி, அவரிடமிருந்த, 1,100 ரூபாய் மற்றும் வாட்ஜ் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பியது. இதில், படுகாயமடைந்த செல்வராஜ் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
அப்போது, ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரவடிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆரணி டி.எஸ்.பி.,யாக இருந்த மனோகர சுந்தரதாஸ், இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேல், எஸ்.ஐ., சத்தியஷீலா, ஏட்டுகள் விஸ்வநாதன், ரங்கநாதன், ஆகியோர் நேரடியாக சென்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செல்வராஜிடம் வாக்கு மூலம் பெற்று கையெழுத்து வாங்கினர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து போலீஸ் ஸ்டேஷன் சென்ற செல்வராஜ், எஃப்.ஐ.ஆரை வாங்கி பார்த்த போது, அது திருத்தம் செய்யப்பட்டு, அவரது கையெழுத்தும் போலியாக இருந்தது.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வராஜ் மனு தாக்கல் செய்தார். போலி எஃப்.ஐ.ஆர்., தயார் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேல், உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார். செல்வராஜ், மீண்டும் திருவண்ணாமலை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்ர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், எஃப்.ஐ.ஆர்.,திருத்தியது தொடர்பாக டி.எஸ்.பி., உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி, ஆரணி டி.எஸ்.பி.,யாக இருந்த மனோகர சுந்தரதாஸ், இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேல் உள்ளிட்ட ஐந்து பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதில், மனோகர சுந்தரதாஸ் தற்போது, பதவி உயர்வு பெற்று சென்னையில் உதவி கமிஷனராகவும், சுந்தரவடிவேல் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராகவும் உள்ளனர். சத்தியஷீலா, மதுரை மாவட்டம், பாலமேடு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், விஸ்வநாதன், ரங்கநாதன் இருவரும் ஆரணி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.