ADDED : நவ 28, 2024 03:28 AM

திருப்பூர் : கேரளாவில் இருந்து ஆந்திரா சென்று கொண்டிருந்த சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயிலில், திருப்பூர்அருகே வந்த போது லேசான தீ விபத்து ஏற்பட்டது.
கேரள மாநிலம் கொல்லம் - ஆந்திரா மசூலிப்பட்டினம் செல்லும் சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திரா நோக்கி, கோவை, திருப்பூர் வழியாக சென்று கொண்டிருந்தது. வஞ்சிபாளையம் அருகே ரயில் வந்த போது, மாற்றுத்திறனாளிகள் அமரும் பின்பக்க பெட்டியில் தீப்பற்றியது.
அதிக புகை எழுந்ததை பார்த்த டிக்கெட் பரிசோதகர் தகவலின்படி, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்து தீயணைப்பான்களால் தீ அணைக்கப்பட்டது.
இதுதொடர்பாக முதல் கட்ட விசாரணையில், ரயில் பெட்டியின் சக்கரம் மற்றும் பிரேக் இடையே இருந்த ரப்பர் உராய்ந்து புகையுடன் லேசாக தீப்பற்றியது தெரிந்தது. அரைமணி நேரத்தில் பிரச்னை சரி செய்யப்பட்டு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.