திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து எதிரொலி; சென்னையிலிருந்து செல்லும் 8 ரயில்கள் ரத்து
திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ விபத்து எதிரொலி; சென்னையிலிருந்து செல்லும் 8 ரயில்கள் ரத்து
UPDATED : ஜூலை 13, 2025 09:15 AM
ADDED : ஜூலை 13, 2025 06:32 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ஆயில் ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீப்பற்றியது. தீயை அணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.
திருவள்ளூர் அருகே 52 டேங்கர்களில் எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் இன்ஜினில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகிறார்கள். சென்னை துறைமுகத்தில் இருந்து எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
8 பெட்டிகள் எரிந்து நாசமானது. தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளனர். தீயை அணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.
மாவட்ட எஸ்.பி., மற்றும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மாவட்ட கலெக்டர் பேட்டி
இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரதாப் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஐஒசி மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது அதிகாலை 5.20 மணிக்கு தீப்பிடித்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் இல்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. சரக்கு ரயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
8 ரயில்கள் ரத்து
* சென்னை சென்ட்ரலில் இருந்து காலையில் கோவைக்கு புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி, சதாப்தி ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
* சென்னை - சென்ட்ரல் மைசூரு இடையே காலையில் இயக்கப்படும் வந்தேபாரத் மற்றும் சதாப்தி ரயில்களும் ரத்து செய்யப்பட்டது.
* சென்னை - பெங்களூரு இடையே இன்று காலை இயக்கப்படும் டபுள் டெக்கர், பிருந்தாவன் ரயில்களும், சென்னை - திருப்பதி ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.