கடை கடையாய் ஏறி நோட்டு போட்டு தீபாவளி வசூல்... வசமாய் சிக்கிய தீயணைப்புத்துறை அலுவலர்கள்!
கடை கடையாய் ஏறி நோட்டு போட்டு தீபாவளி வசூல்... வசமாய் சிக்கிய தீயணைப்புத்துறை அலுவலர்கள்!
UPDATED : அக் 26, 2024 01:51 PM
ADDED : அக் 26, 2024 01:38 PM

காரைக்குடி: காரைக்குடியில் ஒவ்வொரு கடையாக ஏறி தீபாவளி வசூல் செய்து பணத்தை பைக்கிலும், அலுவலக அறையிலும் பதுக்கி வைத்த தீயணைப்புத்துறை அலுவலர்கள் வசமாக சிக்கி உள்ளனர்.
தீபாவளி என்றால் புதுத்துணிகள், பட்டாசுகள், இனிப்புகள் என அமர்க்களம் களைகட்டும். அதே நேரம் தீபாவளி வசூல் என்று ஒரு கூட்டம் ஆங்காங்கே கிளம்பிவிடும். அவர்களை கட்டம் கட்டுவதற்கு அதிகாரிகள் தனித்தனியாக அனைத்து அரசு அலுவலகங்களில் ரெய்டு சென்று அதிரடி காட்டுவர்.
அதன்படி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தீயணைப்புத்துறை அலுவலகத்திலும், அலுவலர்களிடமும் நடைபெற்ற சோதனையில் கிட்டத்தட்ட ஒன்றே கால் லட்சம் ரூபாய் கணக்கில் வராத தொகை கைப்பற்றப்பட்டு உள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கமான நடவடிக்கை என்று கூறினாலும், அப்போது நடந்த நிகழ்வுகள் வேறு ரகமாக இருக்கிறது. அதுபற்றி போலீசார் தரப்பில் தெரிவித்துள்ள விவரம் வருமாறு;
வருவாய்த்துறை அதிகாரி காசிநாததுரை, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அளித்த புகாரில், காரைக்குடி தீயணைப்புத் துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.
புகாரை பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போது, தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் என்பவர் லஞ்ச பணத்துடன் பைக் ஒன்றில் வருவதாக தகவல் கிடைத்தது. உடனடியாக, காரைக்குடி அரசு மருத்துவமனை அருகே நின்று அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கினர். அப்போது அவ்வழியாக வந்த செல்வத்தை பிடித்து சோதனை நடத்தினர். பின்னர் அவரை அழைத்துக் கொண்டு தீயணைப்புத்துறை அலுவலகம் சென்றுள்ளனர்.
அவர் ஓட்டி வந்த பைக்கை சோதனையிட்டு பார்த்த போது சீட்டின் அடியில் எவ்வித ஆவணங்கள் இன்றி 60 ஆயிரம் ரூபாய் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டுபிடித்து எடுத்தனர்.கத்தை, கத்தையாக இருந்த பணத்துடன், யாரிடம் எவ்வளவு வசூல், பணம் தந்தவர்களின் பெயர்கள் எழுதி வைக்கப்பட்ட 2 நோட் புக்குகளையும் கைப்பற்றினர். அந்த நோட் புக்குகளில் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்கும் வண்ணம், தீயணைப்புத்துறை அலுவலகத்தின் முத்திரையை பதிவிட்டு வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர்.
தொடர் விசாரணையில், தீயணைப்பு நிலைய அலுவலர் நவநீத கிருஷ்ணன் என்பவர் உத்தரவின் பேரில் கடைவீதி, முக்கிய வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்குச் சென்று நோட்டு போட்டு தீபாவளி மாமூல் வசூலித்ததாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவர் வைத்திருந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீயணைப்பு நிலையத்தில் இருந்த மற்ற அலுவலர்களிடம் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஓய்வு அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.64,000த்தை கைப்பற்றினர். மேலும், அலுவலக அறையில் இருந்த கணினி மேஜையில் யார், யாரிடம் எவ்வளவு தீபாவளி வசூல், எவ்வளவு பணம் வந்தது என்ற விவரங்கள் எழுதி வைத்திருந்த நோட்புக் ஒன்றையும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
வழக்கமாக தீபாவளி வசூல் என்பது ரகசியமாக அல்லது யாருக்கும் புரியாமல், தெரியாமல் இருக்கும் வகையில் வசூலிக்கப்படுவது உண்டு. ஆனால், காரைக்குடியில் மேல் அதிகாரிகள் உத்தரவின் பேரில், கர்மமே கண்ணாக கடை, கடையாக ஏறி, பணம் வாங்கி அதை யார் எவ்வளவு தந்தனர் என்ற விவரங்களை பொறுப்புடன் நோட்புக்கில் பதிவிட்டு வசூல் செய்துள்ளது, லஞ்ச ஒழிப்புத் துறையினரை மட்டும் அல்ல, வெகுஜனத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.