பட்டாசு குடோன் வெடிவிபத்து: தர்மபுரி அருகே 3 பெண்கள் பலி
பட்டாசு குடோன் வெடிவிபத்து: தர்மபுரி அருகே 3 பெண்கள் பலி
UPDATED : பிப் 24, 2025 05:30 PM
ADDED : பிப் 24, 2025 04:09 PM

தர்மபுரி: தர்மபுரி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் 3 பெண்கள் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே சின்ன முறுக்கம்பட்டியில் பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. இங்கு பட்டாசு தயாரித்து, இருப்பு வைத்திருந்துள்ளனர்.
இன்று மதியம் அங்கு தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மூன்று பேர் உடல் சிதறி பலியாகினர்.
உயிரிழந்த மூன்று தொழிலாளர்களும் பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
உயிரிழந்தவர்கள் திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோர் என தெரியவந்துள்ளது.
வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். விபத்து நடந்த இடத்தில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார்.
ரூ.4 லட்சம் நிதி உதவி:
தர்மபுரி தனியார் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.