முதல் 'ஹைட்ரஜன்' ரயில் இன்ஜின் சென்னையில் சோதனை ஓட்டம்
முதல் 'ஹைட்ரஜன்' ரயில் இன்ஜின் சென்னையில் சோதனை ஓட்டம்
ADDED : ஜூலை 26, 2025 01:06 AM

சென்னை:'சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்ட, முதல், 'ஹைட்ரஜன்' ரயில் இன்ஜினை இயக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டு உள்ளது' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., ஆலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், முதல் ஹைட்ரஜன் ரயில் இன்ஜின் தயாரிக்கும் பணி, கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
நேற்று, ஹைட்ரஜன் ரயில் இன்ஜின் மட்டும், 20 மீட்டர் துாரத்துக்கு வெற்றிகரமாக இயக்கப்பட்டது.
இதுகுறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட பதிவு:
நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் இன்ஜினை இயக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டு உள்ளது. 1,200 குதிரைத்திறன் உடைய இந்த ஹைட்ரஜன் ரயில் இன்ஜினை தயாரித்ததன் வாயிலாக, ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முழு சோதனை ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:
முதல்முறையாக, 118 கோடி ரூபாயில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் ரயில் இன்ஜின் பணிகள் முடிந்துள்ளன. இருப்பினும், வண்ணம் பூச்சு உள்ளிட்ட பணிகள் முடியாமல் இருக்கின்றன.
தற்போது, ரயிலின் இன்ஜினை மட்டும் வெற்றிகரமாக சோதனை நடத்தி உள்ளோம். அடுத்த மாதம், 15ம் தேதிக்குள் எட்டு பெட்டிகள் மற்றும் இருபுறமும் இன்ஜின்களுடன், இந்த முழு ரயிலை இயக்கி சோதனை நடத்த உள்ளோம்.
குறுகிய துாரத்துக்கு மட்டுமே, தற்போது இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக, 50 முதல் 80 கி.மீ., துாரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இந்த ரயிலில், 10 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும், 84 பேர் பயணம் செய்யலாம். அதிகபட்சமாக மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் செல்லும்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலுக்கு பின், மக்கள் சேவைக்கு கொண்டு வரப்படும். முதல் ஹைட்ரஜன் ரயில் என்பதால், பயணியருக்கான பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக, பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

