முதல் ஹைட்ரஜன் ரயில் தயார்; ஹரியானாவில் சோதனை ஓட்டம்
முதல் ஹைட்ரஜன் ரயில் தயார்; ஹரியானாவில் சோதனை ஓட்டம்
ADDED : ஆக 24, 2025 12:44 AM

சென்னை: சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்ட, நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், நேற்று அதிகாலை ஹரியானா கொண்டு செல்லப்பட்டது. இந்த ரயிலை, அடுத்த சில மாதங்களுக்கு, பல்வேறு கட்ட சோதனையில் ஈடுபடுத்த உள்ளனர்.
இதுகுறித்து, ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:
நாட்டிலேயே முதல் முறையாக, 118 கோடி ரூபாய் செலவில், ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில், நீராவியை மட்டுமே வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. மின்சாரத்தில் இயக்கும் ரயிலை விட, இது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது.
முக்கிய நகரங்களில் இருந்து, குறுகிய துாரத்துக்கு மட்டுமே தற்போது இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக, 50 முதல் 80 கி.மீ., துாரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இந்த ரயிலில், 10 பெட்டி கள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும், 84 பேர் பயணம் செய்யலாம்.
ரயில் இன்ஜின், 1,200 குதிரை திறன் கொண்டது; அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த ரயில், வேறொரு இன்ஜினில் இணைக்கப்பட்டு, நேற்று சென்னையில் இருந்து ஹரியானா கொண்டு செல்லப்பட்டது.
வாரியத்தின் உத்தரவுப்படி, பல்வேறு கட்ட சோதனை நடத்தப்படும். அதன்பின், ஹரியானா மாநிலம் சோனிபேட் - ஜிந்த் இடையே, சில வாரங்களுக்கு வெறும் ரயில் மட்டுமே இயக்கப்படும். இந்த தடத்தில் ரயில் மின்மயமாக்கல் பாதை இல்லை.
வயல்வெளி நிறைந்த காட்டுப் பகுதியாக உள்ளது என்பதால், இந்த வழித்தடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
அந்த பாதையில், இந்த ரயிலை இயக்கி, முழு அளவில் பாதுகாப்புக்கு உகந்தது என உறுதி செய்த பின்னரே, பயணியர் சேவைக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.