ADDED : டிச 06, 2025 02:00 AM
சென்னை: சட்டசபை தேர்தலை ஒட்டி ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முதல்கட்ட சோதனை செய்யப்பட்டது.
தமிழகத்தில், 2026 ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை, இந்திய தேர்தல் கமிஷன் துவங்கியுள்ளது. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் கருவிகளை இயக்குவது தொடர்பான பயிற்சி, சென்னையில் நேற்று நடந்தது.
இதில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகள், முதல்நிலை பரிசோதனைக்கான மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
தலைமை தேர்தல் கமிஷன் துணை ஆணையர் பானு பிரகாஷ் யெத்துரு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், இந்திய தேர்தல் கமிஷன் செயலர் மதுசூதனன், கர்நாடகா மாநில இணை தலைமை தேர்தல் அதிகாரி ராகவேந்த்ரா ஆகியோரும் பங்கேற்றனர்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இயக்கம் தொடர்பாக, பெங்களூரில் உள்ள, 'பாரத் எலக்ட்ரானிக்ஸ்' நிறுவன வல்லுனர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.

