ஐந்து இல்லையெனில் வேறு முடிவு: பா.ஜ.,வை மிரட்டும் ஐ.ஜ.த., கட்சி
ஐந்து இல்லையெனில் வேறு முடிவு: பா.ஜ.,வை மிரட்டும் ஐ.ஜ.த., கட்சி
ADDED : பிப் 19, 2024 06:44 AM
மதுரை: 'தமிழகத்தில், ஐந்து சீட்கள் தரவில்லையெனில் பா.ஜ., கூட்டணியில் நீடிப்பது குறித்து வேறு முடிவு எடுப்போம்' என, ஐக்கிய ஜனதா தளம் கட்சிஅறிவித்துள்ளது.
மதுரையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் தென் மண்டல தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில துணைத் தலைவர் முருகப்பன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் மணிநந்தன் கூறியதாவது: விரைவில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் தேசிய தலைவர் நிதீஷ் குமார் உத்தரவின்படி, தமிழக ஐக்கிய ஜனதா தளம் கட்சி பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவெடுத்துஉள்ளது.
பீஹாரில் பா.ஜ., ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைத்து இருந்தாலும், தமிழக அரசியல் நிலவரத்தைப் பொறுத்து, பா.ஜ., கூட்டணியில் நீடிக்கலாமா என மாவட்ட தவைலர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பதற்காக இந்த கூட்டம் நடக்கிறது.
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, கடலுார், துாத்துக்குடி, செங்கல்பட்டு மற்றும் ஒரு ரிசர்வ் தொகுதி உட்பட ஐந்து தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளோம். இதை தமிழக பா.ஜ., தலைமைக்குத் தெரியப்படுத்தி உள்ளோம். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தமிழக பா.ஜ., தலைமை எங்களுக்கு ஒதுக்கும் என நம்புகிறோம்.
அப்படி நடந்தால் மட்டும் கூட்டணியில் பயணிப்போம். சரியான அணுகுமுறை இல்லையென்றால் வேறு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

