ஐந்து மருத்துவ கல்லுாரிகளுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ்
ஐந்து மருத்துவ கல்லுாரிகளுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ்
UPDATED : ஆக 28, 2025 12:35 AM
ADDED : ஆக 27, 2025 10:46 PM

சென்னை:நோயாளிகள் நலன், டாக்டர் நலன், மருத்துவ ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு, மத்திய அரசு தேசிய தர நிர்ணய விருது வழங்கி கவுரவித்து உ ள்ளது.
மத்திய அரசின் தேசிய தர நிர்ணய வாரியம், நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை, நன்கு கவனித்து கொள்ளுதல், சிகிச்சையை மேம்படுத்துதல், தொற்றை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்சங்களில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு, தேசிய தர நிர்ணய சான்றிதழ் வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி என, ஐந்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை, மருத்துவக் கல்லுாரிகளின் முதல்வர்கள், நேற்று சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், ''கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்கள் நல்வாழ்வுத் துறை, 1,600 மத்திய அரசு விருதுகளை பெற்றுள்ளது.
''தற்போது, ஐந்து மருத்துவக் கல்லுாரிகளுக்கான விருது பெரிய மகுடம். இந்த விருதுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி பொறுப்பு இயக்குநர் தேரணிராஜன் கூறியதாவது :
நாடு முழுதும் மருத்துவக் கல்லுாரிகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில், தேசிய தர நிர்ணய வாரியம் விருது வழங்கி வருகிறது.
இதற்கு முன், தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட துறைகள், இவ்விருதை பெற்றுள்ளன. தற்போது தான் முதல் முறையாக, நோயாளிகள் நலன், டாக்டர் நலன், மருத்துவ ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கிய ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு, ஒரே நேரத்தில் விருது கிடைத்து உள்ளது.
வருங்காலங்களில், அனைத்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கும் தேசிய தர நிர்ணய சான்றிதழ் பெற முயற்சிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.