ADDED : பிப் 13, 2024 08:27 AM

சென்னை : தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தமிழறிஞர்கள் ஐந்து பேரின் நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, நுாலாசிரியர்களின் மரபுரிமையாளர்களுக்கு உரிமை தொகையை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்சாமிநாதன் நேற்று வழங்கினார்.
இலக்கணம், இலக்கியம், ஆய்வு என்ற தலைப்புகளில், தமிழுக்கு தொண்டாற்றும் வகையில், நுால்களை எழுதியோரின் நுால்களை, தமிழ் வளர்ச்சித்துறை நாட்டுடைமையாக்கி, பதிப்புரிமையை அனைவருக்கும் பரவலாக்கி வருகிறது.
அந்தவகையில், சாகேப் கு.கோதண்டபாணி பிள்ளை, பேராசிரியர் ரா.மோகன், தமிழறிஞர் கோ.முத்துப்பிள்ளை, இதழியலாளர் மா.சு.சம்பந்தன், மகளிர் படைப்பாளர் அம்சவேணி ஆகியோரின் நுால்களை நாட்டுடைமை ஆக்கியதற்கான உரிமத்தையும், உரிமை தொகைக்கான காசோலைகளையும், நுாலாசிரியர்களின் மரபுரிமையாளர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலர் சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அவ்வை அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.