கொடிக்கம்பம், விளம்பர பேனர் விவகாரம்: கோர்ட் உத்தரவை மதிக்காத அரசியல் கட்சியினர்
கொடிக்கம்பம், விளம்பர பேனர் விவகாரம்: கோர்ட் உத்தரவை மதிக்காத அரசியல் கட்சியினர்
ADDED : ஜன 29, 2025 11:08 AM

சென்னை: பொது இடங்களில் கொடிக்கம்பம் அமைப்பதிலும், பிளக்ஸ் பேனர் அமைப்பதிலும் கோர்ட் உத்தரவுகளை அரசியல் கட்சியினர் மதிப்பதே இல்லை என்பது தான் கண்கூடான உண்மை.
இது பற்றி தினமலர் வாசகர் ஆர்.சுகுமாறன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்புகளை அப்பாவி பொதுமக்களை தவிர, அரசியல் கட்சியினரோ, வியாபாரிகளோ கொஞ்சமும் மதிப்பதும் இல்லை; அவற்றை பொருட்படுத்துவதும் இல்லை என்பதை சற்று கூர்ந்து கவனித்தால் உணர முடியும். மதுரை விளாங்குடி, பழங்காநத்தம் ரவுண்டானா அருகே, அ.தி.மு.க., கொடிக் கம்பம் நட அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, 'பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கொடிக் கம்பங்களை, 12 வாரங்களில் அகற்ற வேண்டும். தவறினால் அரசே அகற்றி, அதற்குரிய செலவு தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி, 12 வாரங்களுக்கு பின், அதாவது வரும் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின், எத்தனை கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று கவனித்து பாருங்கள்... ஒரு கொடிக்கம்பம் கூட அகற்றப்பட்டிருக்காது!
சென்னையில், பிராட்வே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் உள்ள பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் பகுதி பிளாட்பாரங்களில், கடை வைக்க கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, அப்பகுதியில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அந்த பலகைக்கு கீழ், கோவிந்தப்ப நாயக்கன் தெரு முனையில் இருந்து, பிரகாசம் சாலை சந்திப்பு வரை பிளாட்பாரத்தில் கடைகளை பரப்பி, இன்றும் வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர், வியாபாரிகள்.
அரசியல் கட்சியினர் வைக்கும் பிளக்ஸ் பேனர்கள், வாகன ஓட்டிகள் மீது சரிந்து விழுந்து, உயிரிழப்பு நேரிடும்போது, பேனர்கள் வைக்க தடை விதித்து நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. அதை, எந்த அரசியல் கட்சியும் மதிப்பது இல்லை; 'நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது' என்ற அகம்பாவத்தில், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சாலைகளில் கூட பேனர்கள் வைக்கின்றனர்.
அரசியல் கட்சியினர் மட்டுமல்ல; விளம்பர நிறுவனங்களும் நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை. வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்து, விபத்தை ஏற்படுத்தும் வகையில், விளம்பர பலகை வைக்கக் கூடாது என்று, நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், விளம்பர பேனர்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர, குறையவில்லை. நீதிமன்ற உத்தரவின் மீது அவ்வளவு மரியாதை!