சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 8,000 கனஅடிநீர் வெளியேற்றம்
சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 8,000 கனஅடிநீர் வெளியேற்றம்
ADDED : நவ 30, 2024 05:06 PM

சென்னை; பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள பெஞ்சல் புயல் மெல்ல, மெல்ல நகர்ந்து வருகிறது. மரக்காணம், மாமல்லபுரம் இடையே இன்று மாலை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
தாம்பரம், வண்டலுர், முடிச்சூர், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. தொடர்ந்து, பெய்து வரும் கனமழையினால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கின்றன.
அதேபோல, சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக, அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், ஆற்றில் இருந்து 8 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அடையாறு ஆற்றில் செல்லும் வெள்ளநீர், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் புகுந்தது. இதனால், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை நீடிக்கும் பட்சத்தில் அடையாறு ஆற்றில் இருந்து வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்கும்.
இதன் காரணமாக, அடையாறு ஆற்றின் கரையோரப் பகுதிகளான ஈக்காடு தாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர். எனவே, கரையோரம் உடைப்பு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.