நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு 25 மலை கிராமங்கள் துண்டிப்பு
நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு 25 மலை கிராமங்கள் துண்டிப்பு
ADDED : டிச 03, 2024 03:58 AM

வேலுார்: நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 25 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
'பெஞ்சல்' புயல் மழையால், வேலுார் மாவட்டம், கணியம்பாடி அடுத்த சிங்கிரி கோவில் அருகே செல்லும் நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழை மற்றும் காற்றால் கத்தாழம்பட்டு, தெற்கு கொல்லை மேடு, சிங்கிரி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த, 50 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன.
அதே போன்று வேலுார் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையிலுள்ள ஜவ்வாதுமலை தொடரில் பெய்த கன மழை காரணமாக, வேலுார் அமிர்தி வன உயிரியல் பூங்காவில் அமைந்துள்ள கொட்டாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழையால் நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமிர்தி வன உயிரியல் பூங்கா அருகிலுள்ள, 2 தரைப்பாலங்களும் நீரில் மூழ்கின.
தரைப்பாலத்தின் மீது, 3 அடிக்கு மேலாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அமிர்தி வழியாக செல்லும் ஜவ்வாதுமலை தொடரிலுள்ள ஜமுனா மரத்துார், நம்மியம்பட்டு, தொங்குமலை, வள்ளியூர், தானிமரத்துார், கானமலை, பாலாம்பட்டு உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு, கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், சிங்கிரி கோவில் பகுதியில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலமும் நீரில் மூழ்கியது. நஞ்சுகொண்டாபுரம் பஞ், வழியாக செல்லும் ஆற்றை பொதுமக்கள் கடந்து செல்ல வேண்டாம். கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க, உள்ளாட்சி அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.