UPDATED : நவ 28, 2026 07:57 PM
ADDED : நவ 28, 2026 07:57 PM

திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், அறங்காவலர் குழுவை கலைத்த உச்சநீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரை கோவில் பொறுப்பாளர்களாக நியமித்தது.
காலை, 11:24 மணியளவில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவரும் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள், ‘அரோகரா’ கோஷத்துடன் மலர் துாவி நீதிபதிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். கோவில் நிர்வாகம் சார்பில், பட்டர்கள் மாலை அணிவித்து பூர்ண கும்ப மரியாதை செய்தனர். பின்னர், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் நீதிபதிகள் இருவரும் தீபம் ஏற்றும் பொருட்கள் அடங்கிய மண் கலயங்களை கோவிலுக்குள் பூஜைக்காக ஏந்திச் சென்றனர்.
மதியம், 12:04 மணிக்கு தரிசனம் முடித்து வெளிவந்த நீதிபதிகள், தீபம் ஏற்றும் பொருட்களுடன் தீபத்துாண் செல்லும் மலைப்பாதைக்கு நடந்து சென்றனர். அங்குள்ள பழனியாண்டவர் கோவில் அருகே பக்தர்கள், குடியிருப்புவாசிகள் சார்பில், மேளதாளம் முழங்க மலர் துாவி, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தீபம் ஏற்றும் பொருட்களை தீபத்துாண் பகுதிக்கு அனுப்பி வைத்த நீதிபதிகள், ‘மாலை 5:00 மணிக்கு தீபத்துாணில் தீபம் ஏற்றப்படும்’ என, அறிவித்தனர்.
மதுரை எஸ்.பி., ஆஜராவாரா?
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தலைமை செயலர், டி.ஜி.பி., உட்பட 13 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன், டிச., 15ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதில், மதுரை எஸ்.பி., தேவநாதன் பெயரும் இருந்தது. ஆனால், சம்பவ இடத்தில் மதுரை எஸ்.பி., இல்லாத நிலையில், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, தகவல் தொடர்பில் ஏற்பட்ட குறையாக இருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர்.
நவ., 24ல் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு பகுதியில் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், மலை ஏறும் பகுதியில் துணை கமிஷனர் கார்த்திக், தர்கா நெல்லித்தோப்பு பகுதியில் எஸ்.பி., சாம்சன், தீபத்துாணிற்கு எஸ்.பி., சீனிவாசபெருமாள், தர்கா மலைப்பகுதியில் எஸ்.பி., ஜெரினாபேகம், மலைப்படிகட்டு பகுதியில் எஸ்.பி., ரமேஷ்பாபு ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதே நேரம், மதுரை எஸ்.பி., தேவநாதன், புறநகர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், சம்பந்தமே இல்லாத அவருக்கு, ‘மதுரை எஸ்.பி.,’ என்ற காரணத்திற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, நீதிமன்றத்திற்கு விளக்க கடிதம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் தரப்பில் இருந்து விலக்கு அளிக்கும் பட்சத்தில், தேவநாதன் டிச., 15ல் நேரில் ஆஜராகமாட்டார் என, போலீசார் தெரிவித்தனர்.
தீபத்துாணில் எரிந்த தீபம்
நீதிபதிகளின் 9 மணி நேரம்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற நேற்று திருப்பரங்குன்றம் வந்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர், மிக சிறப்பாகவும், வேகமாகவும், திட்டமிட்டும் செயல்பட்டு, 9 மணி நேரத்தில் தீபத்துாணில் தீபம் ஏற்றி சாதனை புரிந்தனர். நேரம் வாரியாக நீதிபதிகளின் செயல்பாடு:
* காலை 8:15 மணி: மதுரை விமான நிலையம் வருகை
* காலை 8:30 : ஓட்டல் தி ரெசிடென்ஸ் சிக்னேச்சரில் தங்குதல்
* காலை 10:15 : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஸ்தானிக பட்டர்களுடன் ஆலோசனை
* காலை 11:00 : சி.ஆர்.பி.எப்., தென்மண்டல ஐ.ஜி., திருமலா விக்ரம் உடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
* காலை 11:25 : கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகளுடன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வருகை
* காலை 11:30 : தீபம் ஏற்றும் பொருட்களை சுமந்து சென்று சுவாமி தரிசனம்
* மதியம் 12:04 : சுவாமி தரிசனம் முடித்து தீபம் ஏற்றும் பொருட்களுடன் தீபத்துாண் செல்லும் மலைப்பாதைக்கு நடந்து சென்றனர்
* மதியம் 12:20 : தீபம் ஏற்றும் பொருட்களை தீபத்துாண் பகுதிக்கு அனுப்பி வைத்து, ‘மாலை 5:00 மணிக்கு தீபத்துாணில் தீபம் ஏற்றப்படும்’ என, அறிவித்தனர்
* மதியம் 3:10: ‘தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என்ற உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் பொருட்டு, கோயில் பணியாளர்கள், உரிய அனுமதி பெற்ற 50 பக்தர்கள் அடங்கிய குழுவுடன் மலை ஏறினர்
* மாலை 5:00 மணி: தீபத்துாணில் தீபம் ஏற்றினர்.
மதுரை: ‘‘தீபம் ஏற்றுவதற்கு முஸ்லிம் மக்கள் எந்த பிரச்னையும் செய்யவில்லை. வெளியில் இருந்து தான் அரசியல் செய்கிறார்கள்,’’ என, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றிய பின், உச்ச நீதிமன்றம் நியமித்த, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
நான் பல முறை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்துள்ளேன். எந்த பிரச்னையுமின்றி தீபத்துாணில் தீபம் ஏற்றி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளது. தீபம் ஏற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. தீபம் ஏற்றுவதற்கு முஸ்லிம்கள் எந்த பிரச்னையும் செய்யவில்லை. வெளியில் இருந்து தான் அரசியல் செய்கின்றனர். கோவில், மலை நிர்வாகம் தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. பொதுமக்களுக்கு மலையில் பாதுகாப்பு இல்லாததால், அவர்களை அனுமதிக்க முடியுமா என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் கூறுகையில், ‘‘தமிழகத்தில் ஹிந்து-, முஸ்லிம் ஒற்றுமையாகதான் இருக்கின்றனர். இங்கு எந்த மத கலவரமும் கிடையாது. தீபம் ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடந்து, உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியுள்ளோம்,’’ என்றார்.
