சட்டம் - ஒழுங்கில் கவனம் செலுத்துங்கள்: புதிய கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுரை
சட்டம் - ஒழுங்கில் கவனம் செலுத்துங்கள்: புதிய கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுரை
ADDED : பிப் 02, 2025 12:33 AM

சென்னை: 'சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதில், கலெக்டர்கள் கவனம் செலுத்த வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டர்கள் சதீஷ் -- தர்மபுரி, சரவணன் -- திண்டுக்கல், பிரதாப் - - திருவள்ளூர், தினேஷ்குமார் -- கிருஷ்ணகிரி, ஷேக் அப்துல்லா ரகுமான் -- விழுப்புரம், தற்பகராஜ் -- திருவண்ணாமலை, மோகனசந்திரன் -- திருப்பத்துார், சுகுமார் -- திருநெல்வேலி, சிவசவுந்தரவள்ளி -- திருவாரூர் ஆகியோர், சென்னையில் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்.
அவர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
அடிப்படை தேவை
மக்களுடன் நேரடி தொடர்பில், களத்தில் இருப்பவர்கள் கலெக்டர்கள். அரசின் முத்திரை திட்டங்கள், அன்றாடம் செயல்படுத்தும் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள், அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் திட்டங்களில், கலெக்டர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அரசு அலுவலகங்களுக்கு சென்று, திடீர் ஆய்வு நடத்த வேண்டும். மக்கள் குறை தீர்ப்பு முகாம் மனுக்கள் மீதும், முதல்வரின் முகவரி மனுக்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி, தீர்வு காண வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து, அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
சட்டம்- - ஒழுங்கை நிலைநாட்டுவதில், எஸ்.பி.,க்களுடன் இணைந்து, மாவட்டங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து கலந்தாலோசித்து, தீர்வு காண வேண்டும். 'எங்கள் கலெக்டர், சிறந்த கலெக்டர்' என, மக்கள் பாராட்டும்படியாக பணியாற்ற வேண்டும்.
ஆய்வு
'முதல்வரின் காலை உணவு, மக்களைத் தேடி மருத்துவம்' போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை நேரடியாக களத்திற்கு சென்று, ஆய்வு செய்ய வேண்டும்.
'கலைஞர் மகளிர் உரிமை தொகை, புதுமை பெண், தமிழ் புதல்வன்' போன்ற திட்டங்களை கவனமாக கண்காணித்து, தகுதியுள்ள ஒவ்வொருவருக்கும் பலன் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தலைமை செயலர் முருகானந்தம், பொதுத் துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர் உடனிருந்தனர்.