தேர்தல் அறிவிப்பு எதிரொலி; தலைமைச் செயலகத்தில் முதல்வர் படங்கள் அகற்றம்
தேர்தல் அறிவிப்பு எதிரொலி; தலைமைச் செயலகத்தில் முதல்வர் படங்கள் அகற்றம்
UPDATED : மார் 15, 2026 08:06 PM
ADDED : மார் 15, 2026 06:27 PM

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தலைமை செயலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலினின் படங்கள் அகற்றப்பட்டன.
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, பொது இடங்கள் மற்றும் அரசு சுவர்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
அந்த வகையில், தலைமை செயலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலினின் படங்கள் அகற்றப்பட்டன. அதேபோல, அங்கு விளம்பரப்படுத்தப்பட்ட அரசு திட்டங்கள் மற்றும் பிற தலைவர்களின் புகைப்படங்களும் அகற்றப்பட்டன. சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள சுவர்களில் உள்ள படங்களை ஊழியர்கள் பெயின்ட் அடித்து மறைத்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், அமைச்சர் மெய்யநாதன் எம்எல்ஏ தொகுதி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை ஊழியர்கள் அகற்றினர். உடுமலை தளி ரோட்டில் உள்ள அரசியல் கட்சி பேனர்களை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

ஈரோட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் பெயர் பலகைகளை ஊழியர்கள் அகற்றினர். சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல்வர் படம் மற்றும் பேனர்களை அகற்றி வருகின்றனர்.

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படங்கள் அகற்றப்பட்டன.



