தள்ளுவண்டியில் இட்லி, தோசை விற்போர் இனி லைசென்ஸ் பெறுவது கட்டாயம் உணவு பாதுகாப்பு துறை உத்தரவு
தள்ளுவண்டியில் இட்லி, தோசை விற்போர் இனி லைசென்ஸ் பெறுவது கட்டாயம் உணவு பாதுகாப்பு துறை உத்தரவு
ADDED : நவ 16, 2025 01:46 AM
சென்னை: 'தள்ளுவண்டியில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வோர், உணவு பாதுகாப்பு துறை விதியின்படி, முறையாக உரிமம் பெற்றிருக்க வேண்டும்' என, தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின், தள்ளுவண்டி கடைகள் அதிகரித்துள்ளன. அவற்றில் விற்கப்படும் உணவுப் பொருட்களை, பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிடுகின்றனர்.
தரமற்றவை கடற்கரைகள், பூங்காக்கள், பிரதான சாலைகள், பொழுதுபோக்கு இடங்கள் போன்ற பகுதிகளில் தள்ளுவண்டி கடைகள் அதிகம் உள்ளன.
இந்தக் கடைகளை நடத்துவோரில் பெரும்பாலானோர், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இல்லாமல், முறையான பராமரிப்பு இல்லாமல், உணவுப் பொருட்களை தரமற்ற முறையில் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, தமிழகத்தில் தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர், முறையாக உணவு பாதுகாப்பு துறை விதியின்படி, பதிவு உரிமம் பெற்றிருக்க வேண்டும் என, தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
பானி பூரி, சமோசா, ரவா லட்டு, சிப்ஸ், போண்டா, சூப், மீன், வறுத்த கறி, சிக்கன் பகோடா விற்போர் மற்றும் காலை, மதியம், இரவு நேரங்களில், தள்ளுவண்டியில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பதிவு உரிமத்தை, அரசு 'இ - சேவை' மையங்கள் வழியே பெறலாம்.
நடவடிக்கை பாயும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இல்லாமல், தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்தால், தள்ளுவண்டி கடையின் உரிமையாளருக்கு, 'நோட்டீஸ்' வழங்கி, உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

