உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்; ஹோட்டல்களுக்கு இனி கட்டாயம்
உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்; ஹோட்டல்களுக்கு இனி கட்டாயம்
ADDED : டிச 24, 2024 04:51 AM

சென்னை : 'நடுத்தர மற்றும் பெரிய ஹோட்டல்களில், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழ் பெற்றவர்களை, பணி அமர்த்துவது கட்டாயம்' என, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டு உள்ளது.
உணவு முறை மாற்றத்தால், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், வயிற்று புண் போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு, ஹோட்டல்களில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்வதே பிரதான காரணமாகும்.
காலாவதி பொருள்
குறிப்பாக, ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது; காலாவதியான பொருட்களை பயன்படுத்துதல்; ரசாயனம் கலந்த உணவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஹோட்டல் உணவுகள் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக, உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
எனவே, ஹோட்டல்களில் தரமான உணவு விற்பனையை உறுதி செய்யும் வகையில், 52,520 வணிகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு பயிற்சி பெற்ற ஒருவர், ஹோட்டல்களில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
அறிவுறுத்தல்
இது குறித்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
பெரிய ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள் உள்ளனர்; அவர்கள் தரமான உணவை பொது மக்களுக்கு வழங்குவது குறித்து, சக ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர். அதேநேரம், நடுத்தர ஹோட்டல்களில், அத்தகைய பணியாளர்கள் பணி அமர்த்தப்படவில்லை. தற்போது, சாலையோர உணவு வியாபாரிகளுக்கு, தரமான உணவு வழங்குவது குறித்து, பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அதேபோல, உரிமம் பெற்றுள்ள நடுத்தர ஹோட்டல் உரிமையாளர்கள் அல்லது பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
அப்போது தான் நடுத்தர ஹோட்டல்களிலும், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழ் பெற்றவர் பணியாற்றுவதை உறுதி செய்ய முடியும். உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய, சுகாதாரமற்ற உணவு விற்பனையையும் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.