கடல் கடந்தும் கலக்கும் ஜல்லிக்கட்டு: மலேசியாவில் முதல்முறையாக நடத்த ஏற்பாடு
கடல் கடந்தும் கலக்கும் ஜல்லிக்கட்டு: மலேசியாவில் முதல்முறையாக நடத்த ஏற்பாடு
ADDED : ஆக 26, 2025 06:59 AM

திருச்சி: வரலாற்றில் முதல்முறையாக மலேசியாவில் இம்முறை ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அந்நாட்டு எம்பி சரவணன் முருகன் கூறி உள்ளார்.
தமிழகத்தின் பாரம்பரியமான ஏறுதழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகளவில் பிரசித்தம். ஆண்டுதோறும் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன் பின்னரே பொங்கல் திருநாளில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்.
இந்த போட்டிகளைக் காண வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். தமிழகத்தில் பெரும் பெயர் பெற்ற இந்த போட்டிகள் அண்மையில் முதல்முறையாக இலங்கை திரிகோணமலை சம்பூரில் நடைபெற்றது.
இப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வண்ணம், வரலாற்றில் முதல் முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி இருப்பதாக அந்நாட்டு எம்பி சரவணன் முருகன் கூறி உள்ளார்.
திருச்சியில் அதற்கான ஆய்வுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் இந்த தகவலை தெரிவித்தார். எம்பி சரவணன் முருகன் மேலும் கூறியதாவது;
தமிழகத்தில் மட்டுமே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இலங்கையில் நடந்தது. அதன் வெற்றியைக் கண்ட பின்னர், மலேசியாவிலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
மலேசியாவில் அதிக இந்தியர்கள் வசிக்கின்றனர். அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய வகையில் போட்டிக்கான இடத்தை தேர்வு செய்வதில் சிறிதுகாலம் பிடித்தது.
இப்போது போட்டிக்கான இடத்தை கண்டுபிடித்துவிட்டோம். நவம்பரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். வரலாற்றில் முதல் முறையாக மலேசியாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.
இவ்வாறு மலேசிய எம்பி சரவணன் முருகன் கூறி உள்ளார்.