ADDED : ஏப் 14, 2024 02:19 AM

''பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்போம்,'' என, திருப்பூரில் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி கூறினார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நேற்று முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். இதற்காக நேற்று முன்தினம் இரவே ஸ்டாலின் திருப்பூர் வந்தார்.
பி.என்., சாலை, 'டாலர்' கார்டனில் தங்கியிருந்த ஸ்டாலினை, கோவை, திருப்பூர், ஈரோடைச் சேர்ந்த தொழில் அமைப்பினர் சந்தித்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல், தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முதல்வரை சந்தித்தனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
முதல்வரை சந்தித்த போது, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பாக கேட்டறிந்தார். புதிய 'டப்' திட்டம், தொழிலாளர் திறன் மேம்பாடு, தொழிலாளர் தங்கும் விடுதி கட்டமைப்பு, திருப்பூர் நகரின் கட்டமைப்பு மேம்பாடு, மரபுசாரா எரிசக்தி உற்பத்தி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினோம்.
பின்னலாடை தொழில் வாரியம் அமைக்குமாறு கேட்டுக் கொண்டோம். திருப்பூரில் ஏற்றுமதி மையம் மற்றும் பரிசோதனைக்கூடம் அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 10 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். தொழிலாளருக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.
பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை நிச்சயம் செய்து கொடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

