தென் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி: ஸ்டாலின் வழங்குகிறார்
தென் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி: ஸ்டாலின் வழங்குகிறார்
ADDED : பிப் 23, 2024 02:15 AM
சென்னை:
தென் மாவட்ட விவசாயிகளுக்கு, 201 கோடி ரூபாய் நிவாரண நிதியை வரும் 26ல் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
வடகிழக்கு பருவமழை, 2023 டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் வரலாறு காணாத அளவில் பெய்தது. இதனால், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் பயிர் பாதிப்பு ஏற்பட்டது.
மத்திய குழுவினர் துாத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆய்வு நடத்தினார்.
இதையடுத்து, மத்திய அரசிடம் இருந்து இடைக்கால நிவாரணமாக, 5,060 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது; இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. பயிர் நிவாரணம் கேட்டு விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், 1.64 லட்சம் ஏக்கர் பயிர் பாதிப்புக்கு ஆளான, 1.98 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 160 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோல, 38,840 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் பாதிப்புக்காக, 62,735 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 41.24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 201 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிவாரண நிதியை வழங்க, வரும் 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துாத்துக்குடி செல்லவுள்ளார்.