மலையேற்ற திட்டத்தில் புதிதாக 7 இடங்கள் சேர்ப்பு : வனத்துறை நடவடிக்கை
மலையேற்ற திட்டத்தில் புதிதாக 7 இடங்கள் சேர்ப்பு : வனத்துறை நடவடிக்கை
ADDED : நவ 05, 2025 01:31 AM
சென்னை: தமிழகத்தில் வனத்துறை செயல்படுத்தும் மலையேற்ற திட்டத்தில், புதிதாக ஏழு இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் சூழலியல் சுற்றுலா திட்டம் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில், உரிய அனுமதியின்றி தனியார் வாயிலாக, மலைகளில் செல்வோர் விபத்து உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்குகின்றனர்.
அதனால், வனத்துறை சார்பில், உரிய களப்பணியாளர்கள் வழி காட்டுதலுடன், பொதுமக்கள் மலையேற்றம் செல்ல புதிய திட்டம் உருவாக்கப்பட்டது.
இதன்படி, கோவை, திண்டுக்கல், நீலகிரி உட்பட, 14 மாவட்டங்களில், 40 இடங்களில் மலையேற்ற திட்டம் கடந்த ஆண்டு துவக்கப் பட்டது.
பொதுமக்கள் முன்கூட்டியே கட்டணம் செலுத்தி, 'ஆன்லைன்' முறையில் பதிவு செய்தால், உரிய இடங்களில் மலையேற்றம் செல்லலாம். இதற்கு பொது மக்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது.
இதுகுறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு அக்., இறுதியில் இத்திட்டம் துவக்கப்பட்டது. இந்த ஓராண்டில், 15,500 பேர் இதில் பங்கேற்றுள்ளனர். அவர்களில், மூன்றில் ஒரு பங்கினர் பெண்கள். தற்போது, முறையான பயிற்சியுடன், 130 வழிகாட்டிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். மலையேற்ற திட்டத்தில் கூடுதலாக ஏழு இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் கும்பக்கரை வெள்ளகவி, கொடைக்கானல் வெள்ளகவி, திருப்பூர் சின்னார் செக்போஸ்ட், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெள்ளகவி கேம்ப் ஸ்டே, கோவை மானாம்பள்ளி, திருவள்ளூர் மாவட்டம் குடியம் குகைகள், நீலகிரி மாவட்டம் ஜென்போல் ஆகிய இடங்களில் மலையேற்ற திட்டங்கள் அனுமதிக்கப்பட உள்ளன.
இதற்கான கட்டண விகிதங்கள், https://trektamilnadu.com/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

