மனித, விலங்கு மோதலை தடுக்க குழு அமைத்தது வனத்துறை
மனித, விலங்கு மோதலை தடுக்க குழு அமைத்தது வனத்துறை
ADDED : டிச 08, 2025 02:23 AM

சென்னை: கோவை மாவட்டம் வால்பாறையில், மனித, விலங்கு மோதலை தடுப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்க, உயர்நிலைக்குழு அமைத்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில், சமீபத்தில் சிறுத்தை தாக்கியதில், சிறுவன் பலியான விவகாரம், அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியிருப்பு பகுதிகளுக்கு வனவிலங்குகள் வருவதை தடுக்க வலியுறுத்தி, மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
விளக்குகள் இது தொடர்பாக, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட அறிக்கை:
வால்பாறையில் சமீபத்திய சம்பவத்தை அடுத்து, தொழிலாளர் குடியிருப்புகளை சுற்றியுள்ள செடிகளை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும்.
வீடுகளை சுற்றி விளக்குகள் அமைக்க வேண்டும் என, தேயிலை தோட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பக எல்லைக்கு வெளியே உள்ள எஸ்டேட் பகுதிகளில், தலைமை வன உயிரின காப்பாளரின் பரிந்துரைப்படி, உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
கூடுதல் முதன்மை தலைமை வனக்காப்பாளர் ராமசுப்பிரமணியன் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர், பொள்ளாச்சி துணை கலெக்டர், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை பிரதிநிதி, வால்பாறை நகராட்சி ஆணையர், வால்பாறை மண்டல தோட்டங்கள் பிரிவு தொழிலாளர் துறை உதவி ஆணையர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பரிந்துரை இக்குழு, வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதிகளில், பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், நிலைமைகளை மதிப்பீடு செய்யவும் பரிந்துரைகள் வழங்கும்.
இது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, இரண்டு வாரங் களுக்குள் இக்குழு சமர்ப்பிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

